பள்ளிகள் திறக்கும் நேரம். பெற்றோர் தம் குழந்தைகளுக்கு பார்த்து, பார்த்து பைகளை வாங்குவர். இப்போதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்கு கூட அவர்களது உயரத்துக்கு மீறிய அளவுகளில் பைகளை வாங்குகின்றனர்.
தம் வசதியைக் காட்டவும், எதற்கும் பெரிசாக இருக்கட்டும் என்று பெரிய அளவுகளில், காஸ்ட்லியானதை வாங்குவர். இது தேவையற்றது. பைகளை சரியான அளவில் வாங்குவதால் முதுகுக்கான அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.
பெரிய பைகள் வெயிட் அதிகமாக இருப்பதுடன் பிள்ளைகளுக்கு முதுகுவலி, கழுத்துவலியை ஏற்படுத்துவதோடு, அவர்களின் நடையையும் மாற்றி விடுகிறது. கழுத்துப் புறமோ, தோள் பட்டைக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பைகளையும், இடுப்பிற்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் பைகளையும் வாங்கக் கூடாது.
இடுப்பு பகுதியில் பெல்ட்டுடன் கூடிய இடுப்பில் பொருந்தக் கூடிய மெத்தென்று இருக்கும் பைகள் சிறந்தது. உள்ளிருக்கும் புத்தகங்கள், பாக்ஸ் போன்றவை முதுகில் குத்தாதவாறு பைகளை தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.
பையின் உட்புறம் பட்டைகள் இருந்தால் நல்லது. பெல்ட்டுடன் இருப்பது பையின் எடை இடுப்பிலும், முதுகிலும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்.
புத்தகப் பை என்பது புத்தகங்கள், நோட்டுக்களுக்கு மட்டும் தான். அந்த பையிலேயே வாட்டர் பாட்டில், சாப்பாட்டு பாக்ஸ் என வைக்க எடை அதிகமாவதுடன் நாளடைவில் கழுத்து வலி, முதுகுவலி வர காரணமாகிவிடும்.
ஒரே பக்கமாக பையை மாட்டி செல்வதையும் பிள்ளைகளை தவிர்க்க சொல்ல வேண்டும். நேராக நிமிர்ந்து எந்த பக்கமும் சாயாமல் நடக்க பழக்க வேண்டும். கைகளை ப்ரீயாக வைத்துக் கொண்டு நடப்பதை சொல்லிக் கொடுக்கவும்.
வாரம் ஒரு முறை பையை சுத்தம் பண்ணி தேவையில்லாதவற்றை எடுத்துவிட சுத்தமாக இருக்கும். அழுக்கில்லாத, அதிக சுமையில்லாத ஸ்கூல் பேக் கொடுப்பதை உறுதி செய்வோம்.
இது எங்கள் பிள்ளைகளுக்கு வருடா வருடம் பைகளை வாங்கும் போது கவனித்து செய்வதை தொகுத்து எழுதியுள்ளேன்.