
நாம் தினமும் காலை எழுந்தவுடன் அவசியம் செய்யவேண்டிய விஷயங்களில் ஒன்று பல் துலக்குவது. அப்படிப் பல் துலக்க பலரும் பல்வேறு பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள். தற்காலத்தில் பெரும்பாலானோர் பல் துலக்க பல்வேறு டூத் பேஸ்ட்டுகளையே பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் பல் துலக்க நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு தவிர, எண்ணற்ற வேதிப்பொருட்களும் கலந்து உள்ளன.
பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான சிறப்பு அப்ராசிவ்ஸ், நுரையை உருவாக்கும் டிடெர்ஜண்டுகள், பற்பசை கெடாமல் இருக்க உதவும் ப்ரசர்வேட்டிவ்கள், ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் ஹீயூமிக்டென்ட்கள், வண்ணம் கிடைக்க நிறமிகள், வாசனைக்கான பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் டி உட்பட நிறைய வேதிப்பொருட்கள் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சேர்க்கப்படுகின்றன என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் தற்போது ஃபுளோரைடு கலக்காத டூத் பேஸ்ட்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில ஆயுர்வேத பற்பசைகள் மூலிகைப் பொருட்கள் கொண்டதாக ஃபுளோரைடு கலக்காத வகையில் உள்ளன. டூத் பேஸ்ட்டில் அதிக அளவு ஃப்ளோரைடு உபயோகம் ஃபுளூரோசிஸ் என்ற பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது.
பற்கள் விழும் சமயத்தில், முளைக்கும்போது அதிக அளவில் புளூரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டை உருவாக்கிவிடும். டூத் பேஸ்ட் வாங்கும்போது வண்ணங்கள் கொண்டதை வாங்குவதை விட வெள்ளை நிற பேஸ்ட்கள்தான் சிறந்தது.
ஃபுளூரைடு குறைந்த டூத் பேஸ்ட்டை தேர்வு செய்வது நல்லது. ஜெல் பேஸ்ட்டுகளை விட, கிரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை. அப்ரேசிவ்ஸ் அதிகமான பேஸ்ட்டுகளால் பல் சொத்தை ஏற்படக் கூடும். எனவே, டூத் பேஸ்டை வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டியது அவசியம். சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
பேஸ்ட் கொண்டு பல் துலக்கும்போது அதிக நேரம் பிரஷை கொண்டு பல் துலக்காமல் மூன்று நிமிடம் மட்டும் பற்களைத் தேய்த்து நன்கு வாய் கொப்பளிக்க, பற்கள் சுத்தமாக இருக்கும். ஒரே விதமான பற்பசையை எப்போதும் உபயோகிக்க வேண்டும். மாற்றி, மாற்றி வாசனைக்காகவும், நுரை நிறைய வரும் போன்ற காரணங்களுக்காகவும் டூத் பேஸ்டை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது.