வீடு மாறும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

Things to consider when moving house!
Lifestyle articles
Published on

வாடகை வீடு, சொந்த வீடு என எதற்கு குடிபோவதாக இருந்தாலும் அது உற்சாகமான அனுபவமாக இருக்கவேண்டும்.  

வீட்டின் அமைப்பு:

செல்லுமிடத்தில் பணத்தட்டுப்பாடோ, ஆரோக்கிய குறைபாடோ  இன்றி மகிழ்ச்சியாக இருக்க சில விஷயங்களை செய்ய வேண்டும். சிலர் புது வீட்டுக்கு சென்ற நேரம் நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை. ஏன் தான் வீடு மாறினோமோ  என்று புலம்புவார்கள். வேறு சிலரோ புது வீட்டுக்கு வந்த நேரம் அமோகமாக உள்ளது என்று சந்தோஷப்படுவார்கள் இதற்கெல்லாம் அந்த வீட்டின் வாஸ்து அமைப்பு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே வீடு சரியான அமைப்பில் உள்ளதா என்பதை கவனிக்கவேண்டும்.

குடிப்புக உகந்த காலம்:

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்கள் புது வீடு போக உகந்த காலமாகும். வாஸ்து சாஸ்திரப்படி இந்த மாதங்களில் குடிபுகுவது சுபிட்சத்தை உண்டாக்கும். பொதுவாகவே வீட்டில் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் இருப்பது அவசியம்.  காலி பண்ணி வரும்போது தேவையில்லாத உடைந்த பொருட்களை எடுத்து வருவதை தவிர்த்து விடவும். நல்ல சுப நாட்களில் குடியேறுவது அவசியம். ஆடி, புரட்டாசி, மார்கழி,  பங்குனி மாதங்களில் புது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது.

போக்குவரத்து: 

போக்குவரத்து எளிதாக இருக்குமா? குழந்தைகள் படிக்கும் பள்ளி,  கல்லூரிக்கு போக பஸ் வசதிகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சாலைகள் நன்றாக இணைந்திருக்கிறதா?  இரவில் நேரம் கழித்து வரும்பொழுதும் எளிதாக வீட்டிற்கு வர தெருவில்  மின்விளக்கு வசதிகள் உள்ளதா? அருகில் கோவில்,  மருத்துவ வசதி கொண்ட ஆஸ்பத்திரிகள் உள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரண்டாவதாக தாய்மை அடையும்போது மூத்த குழந்தையை பெற்றோர்கள் சமாளிப்பது எப்படி?
Things to consider when moving house!

அக்கம் பக்கம்:

அக்கம் பக்கத்தில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா? குடிகாரர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்றால் தினமும் தகராறும்,  சண்டை சச்சரவும் நடந்து கொண்டிருக்கும்.  இது நம் மனநிலையை பாதிக்கும்.  எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அருகில் மளிகைக்கடை, காய்கறி கடைகள் உள்ளனவா என்றும்,. மழையில் தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கி வீட்டிற்குள் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் கேட்டறிதல் வேண்டும்.

வீட்டு வசதி: 

குடிபோகும் வீட்டில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்கவேண்டும். வீட்டில் போதுமான அளவு ஜன்னல்கள் உள்ளதா?  காற்றோட்டமான அமைப்பு இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். செல்லப் பிராணிகள் இருந்தால் அவற்றை வளர்க்க அனுமதிப்பார்களா என்றும், செல்போன் டவர் சிக்னல் அப்பகுதியில் தடைப்படாமல் கிடைக்கிறதா,  அருகில் குப்பை கிடங்குகள் ஏதேனும் இருக்கிறதா (காற்றின் மூலம் எப்பொழுதும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்) என்பதையும் கவனிக்க வேண்டும்.

பார்க்கிங்  மற்றும் லிப்ட் வசதி:

2வது, 3வது மாடியில் குடிபோவதாக இருந்தால் லிப்ட் வசதி உள்ளதா என்று பார்க்கவேண்டும்.  நம்முடைய வண்டியை பார்க்கிங்  செய்யும் வசதி நாம் குடிபோகும் வீட்டில் உள்ளதா என்பதை கவனிப்பது நல்லது. போதுமான வசதி இல்லை என்றால் தெருவில் நிறுத்தி வைக்கப்படும் வண்டிகள் மழையில் நனைந்து,  வெயில் காய்ந்து விரைவில் கெட்டு விடும். திருடு போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் தனியான மீட்டர் இருப்பது நல்லது.  இல்லையெனில் பகிர்தலில் பிரச்னை ஏற்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com