குழந்தைகளை இப்படித்தான் பழக்க வேண்டும்!

குழந்தைகளை இப்படித்தான் பழக்க வேண்டும்!

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே சில எளிமையான வேலைகளை சொல்லிக் கொடுத்தால், அதை அவர்கள் அழகாக கற்றுக் கொள்வார்கள். மேலும், அது அவர்களுக்கு சிறு உடற்பயிற்சியாகவும் அமையும். காலையில் படுக்கையை விட்டு எழும்போது சுறுசுறுப்புடன் உற்சாகத்துடன் எழுவார்கள். அதற்கு என்னவெல்லாம் அவர்களுக்குத் கற்றுத் தரலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!

* குழந்தைகள் வளர்ந்துவரும்போது முதலில் பல் தேய்க்க கற்றுத் தருகிறோம். குளிக்க, சாப்பிட கற்றுத் தருகிறோம். அதுபோல, காலையில் எழுந்ததும் அவர்கள் போர்த்தியிருக்கும் போர்வையை மடித்து வைக்க கற்றுத் தரலாம்.

* பள்ளிக்குச் செல்ல குளிக்க போவதற்கு முன் அவர்களின் சீருடையை அவர்களே எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் செல்ல கற்றுத் தரலாம்.

* வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டவுடன் அந்த நாற்காலிகளை உள்ளே தள்ளி வைத்துவிட்டு எழுமாறு கற்றுத் தர வேண்டும். இல்லையேல், அதில் இடித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லிப் பழக்க வேண்டும்.

* அவர்கள் சாப்பிட்ட தட்டில் இருக்கும் கருவேப்பிலை போன்றவற்றை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, ‘சிங்’கில் தட்டை போடுமாறு கூற வேண்டும். இதனால் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்.

* முக்கியமாக வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வணக்கம் கூறி, மனமுவந்து நலம் விசாரிக்க, ஒரு டிரேயில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க பழக்கிவிட வேண்டும்.

* வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த முறை வீட்டிற்கு யார் வந்தாலும் ஓடி ஒளிந்து கொள்ளாமல் இயல்பாக பழக ஆரம்பிப்பார்கள்.

* ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சாப்பிட அழைத்துச் சென்றால், அடுத்தவர் டைனிங் டேபிள் பக்கம் நின்று வேடிக்கை பார்க்காதவாறு சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்த வேண்டும். சாப்பிடும்போது அங்குள்ள ஸ்பூன், ஃபோர்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தந்துவிட வேண்டும்.

* உறவினர் வீடுகளுக்குச் செல்லும்பொழுது, அங்கிருக்கும் விளையாட்டுப் பொருட்களிலோ அல்லது மற்ற பொருட்களையோ தொடாதவாறு பழக்கப்படுத்தி வைத்திருக்க வேண்டும். வீட்டுக்காரர்களாகவே ஏதாவது பொருளை கொடுத்தால் விளையாடலாமே தவிர, மற்றவற்றை தொடுவது, கைவைத்து கலைப்பது போன்றவற்றிற்குத் தடா போட்டு விடுங்கள்.

* வாஷிங் மெஷின் போன்றவற்றில் துவைத்த துணியை எடுக்க ஆரம்பிக்கும் முன், ஸ்விட்ச் ஆப் செய்த பிறகு மெஷினில் இருந்து துணிகளை எடுக்க கற்றுத் தர வேண்டும்.

* காய்ந்த துணிகளில் அவர்களுடையதை மட்டுமாவது எடுத்து மடித்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தையும் கற்றுத் தர வேண்டும்.

* தினசரி பள்ளிக்குப் போட்டு செல்லும் ஷூவை சுத்தப்படுத்தி பாலிஷ் போட்டு வைத்துக்கொள்ள சொல்லித் தர வேண்டும். கூடவே துவைத்த சாக்ஸையும் எடுத்து வைத்துக்கொண்டு, அழுக்கானதை துவைக்கும் வாளியில் போடவும் சொல்லிக் கொடுத்து விட வேண்டும்.

* குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். அவர்களை நாம் எப்படி மோல்டு செய்கிறோமோ அப்படியே வளர்வார்கள். ஆதலால் சிறுவயதில் இருந்தே அவர்களுக்கான பொறுப்புகளை கொடுத்து, எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் முறையையும், தன் வேலையை தானே செய்துகொள்ளும் பக்குவத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டால், பள்ளி செல்லும் வேளையில் தாய்க்கும், சேய்க்கும் பதற்றம் எதுவும் இருக்காது. குழந்தைகளும் செல், டிவி பார்ப்பதில் ஆர்வத்தை குறைத்துக் கொள்வார்கள். இதனால் ஒரு பண்பட்ட வளர்ச்சி இருக்கும்.

ஆதலால், இது போன்றவற்றை குழந்தைகளுக்கு விளையாட்டாகவே கற்றுக் கொடுத்து அவர்கள் வேலையை அவர்களே செய்யப் பழக்குவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com