அழகு என்றாலே ஜப்பான் பெண்கள் தனி அழகுதான். அவர்கள் தங்களின் அழகைப் பராமரிக்க பல வழிகளைக் கையாளுகின்றனர். அதில் குறிப்பாக, நீர் சிகிச்சை என்று ஒன்றுள்ளது. அதைப் பயன்படுத்தியே பெரும்பாலான ஜப்பான் பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்கின்றனர்.
ஜப்பான் பெண்களின் அழகுக்கு முக்கியமான காரணமாக நீர் சிகிச்சை உள்ளது. இதற்காக சில விதிகளைப் பின்பற்றி சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அழகைப் பெறலாம் என ஜப்பான் பெண்கள் நம்புகிறார்கள். ஜப்பான் நாட்டில் தண்ணீரும் அழகு சாதனப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்றால்,
காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கிறார்கள். அது அதிக சூடான நீர் அல்ல, அரை வெப்ப நிலையில் இருக்கும் நீர். இது செரிமானத்துக்கு பயனளிக்கும் என்கின்றனர்.
இந்த நீர் சிகிச்சையில் குளிர்ந்த நீரை குடிக்கவே கூடாது. ஒருவர் பருகக்கூடிய அளவுக்கு வெப்பமானதாக நீர் இருக்க வேண்டும். மேலும், வெதுவெதுப்பான நீரையும் அருந்தலாம். ஆனால், குளிர்ந்த நீர் குடிக்கவே கூடாது.
ஜப்பான் விஞ்ஞானிகளும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீர் குடிப்பது நல்லது என்று கூறுகின்றனர். இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு சேரும் அபாயம் குறைகிறதாம்.
குறிப்பாக, காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பாக, இரண்டு முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் குடித்தால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். இதனால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது என மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.
மேலும், காலையில் தண்ணீர் குடிக்கும்போது உட்கார்ந்த நிலையில்தான் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரக பாதிப்பு குறைக்கப்படுகிறது.
அதேசமயம், இந்தத் தண்ணீர் சிகிச்சையில் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு சிப் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு அல்லது மூன்று நிமிட இடைவெளி கொடுத்து மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிக்கலாம்.
இப்படி முறையாகத் தண்ணீர் குடிக்கும் சிகிச்சையானது எடையைக் கட்டுப்படுத்த உதவும் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். இது பெண்களின் சருமம் மற்றும் முடியின் தன்மையைப் பராமரிக்கிறது. இதனால் முகத்துக்கு வயதாகும் தோற்றம் குறைகிறது. இதன் காரணமாகவே இந்த நீர் சிகிச்சையின் மீது ஜப்பான் பெண்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நீர் சிகிச்சையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் முயற்சிக்கலாம்.