சிக்கனம் மற்றும் சேமிப்பைப் பற்றி நாம் எப்போது சிந்திப்போம் தெரியுமா? கையில் பணம் இல்லாதபோது, சிரமப்படும்போதுதான். ‘ஆஹா, சேமித்திருக்கலாமே, சிக்கனமாக இருந்திருக்கலாமே, தவறு செய்து விட்டோமே, இனியாவது சிக்கனமாகவும் சேமிப்புடனும் வாழ வேண்டும்’ என நமக்கு அப்பொழுதுதான் உரைக்கும். ஒரு குடும்பத்தின் இரு கண்கள் போன்றது சேமிப்பும் சிக்கனமும்தான். நமக்கு நல்ல வருமானம் இருந்தபோதிலும் பணம் செலவாகி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை தவிர்த்தால் எளிதாக பணத்தை சேமிக்கலாம். அதைப் பற்றிய சில யோசனைகளை இப்பதிவில் காண்போம்.
சிலருக்கு மாதத் தொடக்கத்தில் ஊதியம் கிடைத்தாலும், மாதம் முடிவதற்குள் பணம் காலியாகி விடும்! அவர்களுக்கு நிலையான வருமானம் இருந்தும், நிதி நிலை மேம்படுவதில்லை. வழக்கமான நல்ல வருமானம் இருந்தும் இவ்வாறு பணம் இல்லாமல் போனதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவற்றை நீக்க வேண்டும்.
புகைப் பிடிப்பதற்காக அதிகம் செலவு செய்வதால் சிலர், சேமிப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இது சிறிய விஷயமாக இருந்தாலும், புகைப்பதை தவிர்த்தால் ஆரோக்கியத்துடன் உங்கள் நிதி நிலைமையும் மேம்படும்.
தூய்மையைக் காரணம் காட்டி பலர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கடைகளில் பாட்டில் தண்ணீரை வாங்கிச் செல்கின்றனர். நீங்கள் நினைத்தால் வீட்டிலிருந்தே தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும். இதன் மூலம் தண்ணீர் வாங்கும் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், மீண்டும் மீண்டும் தண்ணீர் வாங்கும் சிக்கலில் இருந்தும் உங்களைக் காப்பாற்ற முடியும்.
கடைகளில் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள், அதன் மூலமாகவும் சேமிப்பை இழக்கிறார்களாம். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் நிதி நிலைமை சீராகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புதிய பிராண்ட் தயாரிப்பு சந்தையில் வரும்போது, அது உங்களுக்குத் தேவைப்படும் என்ற மனநிலையிலிருந்து வெளியேறுங்கள். உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டால் மட்டுமே அந்த பொருளை வாங்குங்கள். ஆசைக்காக பலர் பொருட்களை வாங்கி குவிக்கும்போது பணத்தை இழக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்படும்போது கையில் பணம் இருக்காது!
இனியாவது, கட்டுப்பாடுடன் மாத சம்பளத்தில் அல்லது வரும் உபரி வருமானங்களில் சேமிப்பையும் செலவில் சிக்கனத்தையும் கடைபிடித்து சிறப்போடு குடும்பம் நடத்துவோம்.