சிக்கனமும், சிறு சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்!

Savings
சிறுசேமிப்புhttps://tamil.examsdaily.in

சிக்கனம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. நாம் எவ்வளவு சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஆனால், செலவு செய்யும்போது அதைப் பற்றி யோசிப்பதில்லை, வருங்காலத்தைப் பற்றியும் யோசிப்பதில்லை. ஒரு கஷ்டம் என்று வரும்போதுதான் நாம் சிக்கனத்தைப் பற்றி உணர்கிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக சேமிப்பில் வைக்க வேண்டும். அதுவே நமக்கு பிற்காலத்தில் உதவும். சேமிப்பில் கவனம் செலுத்துவோரின் வாழ்க்கை இறுதி நாட்களில் இன்பமாக அமையும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில், ‘Frugality’ என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.

உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்பு பற்றிக் கூறும்போது, "உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். உங்கள் வருமானத்தில் சேமிப்புப் போக மீதியைச் செலவு செய்யுங்கள். சேமிப்பின் அடிப்படையே சிக்கனம்தான்” என்கிறார். வளங்களை வீணடிக்காமல், திறமையாகக் கையாள்வதை இது குறிக்கும். அதாவது, அவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயை தவிர்க்க பாரம்பரிய மருத்துவம் பரிந்துரைக்கும் உணவுகள்!
Savings

பொதுவாக, செலவு செய்வதைக் கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது, அவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சிக்கனம் என்பது,தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி. மூன்றாவதாக ஆடம்பரம் என்பது, மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதிக்கு மீறி செலவு செய்வது. நான்காவதாக ஊதாரித்தனம் என்பது, கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளை செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

சேமிப்புப் பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இப்பழக்கத்தைச் சரியாகச் செய்தனர். பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர்.

இன்றைய காலகட்டத்திலும் நம் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நாமும் பழக வேண்டும். குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால்தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை நீங்கள் சிக்கனம் என்றால் என்ன? என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சிக்கனமும், சிறு சேமிப்பும்தான் மகிழ்வான வாழ்விற்கு வழி வகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com