குழந்தைகளின் சிறுவயதில் பெற்றோர்கள் அவர்களின் உடல், மனம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். ஆனால், இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், பெற்றோர்கள் பலவிதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். வேலை, குடும்பப் பொறுப்புகள் சமூக எதிர்ப்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதனால், குழந்தைகளின் மனம்-உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, பெற்றோர் குழந்தை உறவும் பாதிக்கிறது.
குழந்தைகள் வளர்ப்பில் ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்கள்:
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் பொறுப்புள்ள பணி. குழந்தைகளின் அன்றாடத் தேவைகள், கல்வி, சமூக வாழ்க்கை, உடல்நலம் போன்ற பல விஷயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், பெற்றோர்கள் பலவிதமான மன அழுத்தத்தங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களுக்கு குடும்பப் பொறுப்புகள், வேலை என பல விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டி இருப்பதால் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகிறது.
குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவுகள் ஆகிறது. குழந்தைகளின் கல்வி, உணவு, உடை பொழுதுபோக்கு போன்ற அனைத்து தேவைகளுக்கும் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். இதனால், பெற்றோர்கள் பொருளாதார அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த சமூகம் பெற்றோர்கள் குறித்து பல எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும், சமூகத்தில் ஒரு நல்ல குடிமகனாக வளர்க்க வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் பெற்றோர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன.
சில குழந்தைகள் கவனக் குறைவு, அதிக செயல்பாடு, மோசமான நடவடிக்கை போன்ற பிரச்சனைகளைக் கொண்டிருக்கலாம். இத்தகைய பிரச்சினைகள் பெற்றோர்களை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. மேலும், பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் இடையே உறவுப் பிரச்சனை இருப்பதாலும் மன அழுத்தம் ஏற்படும்.
பெற்றோர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?
பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதோடு உறவினர், நண்பர்கள், தங்கள் துணை என அனைவரிடமும் பகிர வேண்டும். மன அழுத்தம் அதிகமானால் ஒரு மனோ தத்துவ நிபுணரை அணுகி உதவி பெறலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்க யோகா தியானம் போன்ற மன அழுத்தத்தைத் தளர்த்தும் பயிற்சிகளை செய்யலாம். மேலும், உடற்பயிற்சி செய்வது மூலமாகவும் மன அழுத்தத்தைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
தினசரி போதுமான அளவு தூங்குங்கள். உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தைக் குறைக்க முற்படுங்கள். பொறுப்புகளை சுமையாக நினைக்காமல் அது உங்கள் கடமை என நினைத்தால் மன அழுத்தம் இல்லாமல் குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்க முடியும்.