கோடை வெயிலால் அவதிப்பட்ட நமக்கு பருவமழையைக் கண்டவுடன், உடலும் மனதும் சற்று குளிர்ச்சி அடையும். நமக்கு மட்டுமில்ல மரம், செடி, கொடி போன்ற தாவரங்களுக்கும் இதே நிலைமைதான். மழைக்காலத்தில் தான் தாவரங்கள் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் செழித்து வளரும். துடிப்பாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும். அதே சமயத்தில், கோடைக்காலத்தைக் காட்டிலும், மழைக்காலத்தில் செடிகளுக்கு அதிக பராமரிப்பும், கவனமும் தேவைப்படும்.
வீட்டு தாவாரங்களுக்கான மழைக்கால பராமரிப்பு முறைகள்:
பருவ மழைக் காலங்களில் மழையின் காரணமாகவும், குறைவான சூரிய ஒளியின் காரணமாகவும் மண்ணில் ஈரப்பதமாக இருக்கும். எனவே, செடிகளுக்கு கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
மழைக்காலத்தில் செடிகளின் தொட்டிகளில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. இதனால், மண் கட்டியாகி செடிகளின் வேர்கள் அழுகிப் போகலாம். செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், புழுக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் இருப்பிடமாக மாறி பூச்சி தாக்குதல்களுக்கு இது வழிவகுக்கலாம். எனவே, அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றிவிட வேண்டும்.
தொட்டியில் உள்ள வடிகால் துளைகளை சரிபார்த்து, அதில் அடைப்புகள் இருந்தால் அகற்றலாம். செடியை வேறொரு தொட்டிக்கு மாற்றி அமைக்கலாம். குறிப்பாக, சிறிய தொட்டிகளில் உள்ள செடிகளை பெரிய தொட்டிகளில் மாற்றலாம். அவ்வாறு மாற்றியமைக்கப் போகும் தொட்டியில் இரண்டு பங்கு மண்ணையும் ஒரு பங்கு மாட்டுச் சாணத்தையும் நிரப்புவதன் மூலம் தொட்டியில் மழைநீர் தேங்காமல் பாதுகாக்க முடியும்.
மழை, செடிகளுக்கு நல்லது என்றாலும், செடிகளை நேரடியாக மழை விழாத இடங்களில் வைப்பது நல்லது. ஏனெனில், செடிகளை தாங்கி பிடித்திருக்கும் மண்ணில் அரிப்பு ஏற்பட்டு அவை நிலை குலைந்து போகலாம் அல்லது மழைநீர் பூக்களின் மீது நேரடியாக விழும்போது பூக்கள் உதிர்ந்து போகவும், சேதமடைந்து போகவும் வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் பூஞ்சை தாக்குதலுக்கு தாவரங்கள் ஆளாகலாம். எனவே, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என வேப்ப எண்ணெயை இலைகளின் மேல் தெளிக்கலாம்.
மழைக்காலத்தில் செடிகள் மற்றும் மண்ணில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பூச்சிகள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அழிக்க சில பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
தோட்டத்தில் நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க, இறந்த இலைகள், குப்பைகள் மற்றும் களைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
செடிகள் நன்கு செழித்து வளர ஏற்றது மழைக்காலம் என்பதால், மரக்கன்றுகள் மற்றும் தாவரங்களில் இருந்து ஒரு பகுதியை வெட்டி வேறொரு இடத்தில் மீண்டும் நடவு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், ஓரிரு வாரங்களிலேயே முளை விடுவதையும் வளருவதையும் காண முடியும்.
அதிகமாக வளர்ந்த கிளைகளை அடிக்கடி கத்தரிக்க முயற்சிக்கலாம்.
மழைக்காலங்களில் சூரிய ஒளியைப் பார்ப்பது சற்று கடினம் தான். சூரிய ஒளி தேவைப்படும் செடிகளின் தொட்டிகளை சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் மாற்றியமைக்கலாம்.