
தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் கருவேப்பிலை, கொத்தமல்லியை கூட அடிக்கடி சென்று கடைகளில் வாங்க வேண்டியதாகதான் இருக்கும். ஆனால் நினைத்த நேரங்களில் ப்ரஷாக பறித்து உணவுக்கு பயன்படுத்த வீட்டிலேயே கொத்தமல்லி செடி சூப்பராக வளர்க்கலாம். இதற்கு பெரிய செலவும் ஆகாது, பராமரிப்பும் தேவையில்லை. அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தனியா விதைகளை நசுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு அதை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு சின்ன வாட்டர் கேனில் மண்ணை நிரப்பி அதில், அந்த ஊற வைத்த விதைகளை தூவி விடுங்கள். பிறகு சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிடுங்கள். சிறிது சூரிய ஒளி பட்டால் கூட போதுமானதே. சிலருக்கு சமையலறையிலேயே சூரிய வெளிச்சம் படும், அங்கேயே வைத்தால் போதுமானதாகும். மொட்டை மாடிக்கோ, வாசலிலோ வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு வாரத்தில் கொத்தமல்லி இலைகள் துளிர்விட ஆரம்பித்து விடும். 15 நாட்களுக்கு பிறகு தினசரி உங்கள் சமையலுக்கு இதை பயன்படுத்த தொடங்கலாம். தினசரி நீங்கள் இலைகளை பறிக்க பறிக்க புதிய இலைகள் வளர்ந்துவிடும். இனி பிரஷாகவே கொத்தமல்லி இலைகளை உபயோகிக்கலாம். இதன் மூலம் இயற்கை விளைச்சலாகவும் இருக்கும், விவசாயத்தின் அருமையையும் உணரலாம். இப்படி சில விவசாயத்தை செய்வதன் மூலம் இயற்கை விவசாயத்தை நிச்சயம் பாதுகாக்கலாம்.