வீட்டில் எறும்புத் தொல்லை என்பது அனைவருமே பொதுவாக சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். இந்த விஷயம் சிறியதாகத் தோன்றினாலும் இந்த எறும்புகள் உணவுப் பொருட்களைக் கெடுத்து, சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும். அத்துடன் அவற்றின் தொடர்ச்சியான நடமாட்டம் மன அமைதியைக் கெடுக்கும். எனவே, வீட்டில் எறும்புகளை நிரந்தரமாக வராமல் தடுப்பது அவசியமான ஒன்று. இந்தப் பதிவில் எறும்புகளை விரட்டுவதற்கான பல்வேறு வீட்டு வைத்திய முறைகள் பற்றி பார்க்கலாம்.
எறும்புகள் ஏன் வீட்டுக்குள் வருகின்றன?
பொதுவாகவே எறும்புகள் உணவைத் தேடி வீட்டுக்குள் வருகின்றன. சர்க்கரை, இனிப்பு பொருட்கள், பருப்புகள், இறைச்சித் துண்டுகள் போன்றவை எறும்புகளை அதிகம் ஈர்க்கும் பொருட்களாகும். மேலும், வீட்டில் உள்ள பிளவுகள் விரிசல்கள் போன்ற இடங்களில் எறும்புகள் கூடுகட்டி வாழும்.
எறும்புகளை விரட்டுவதற்கான இயற்கை வழிமுறைகள்:
மிளகாய் தூள் எறும்புகளுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். எறும்புகள் செல்லும் பாதையில் மிளகாய் தூளை தூவுவதன் மூலம் அவற்றை நிரந்தரமாக விரட்டலாம்.
வெங்காயத்தின் வாசனை எறும்புகளுக்குப் பிடிக்காது. எனவே, வெங்காயத்தை நறுக்கி எறும்புகள் செல்லும் பாதையில் வைப்பதன் மூலம் அவற்றை விரட்ட முடியும். அதேபோல புதினாவின் வாசனையும் எறும்புகளை விரட்டும் என்பதால், புதினா இலைகளை அரைத்து எறும்புகள் செல்லும் வழித்தடத்தில் தடவி வையுங்கள்.
வீட்டின் மூளைகளில் எலுமிச்சை சாறு தெளிப்பது மூலமாக எறும்புகளை நிரந்தரமாக வீட்டிற்குள் வராமல் தடுக்க முடியும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு காபித்தூள் கலந்து வீட்டில் தெளித்தால் அந்த வாசனைக்கு எறும்புகள் நிரந்தரமாக வராது.
வீட்டில் உள்ள பிளவுகள், விரிசல்கள் போன்றவற்றை உடனடியாக கவனித்து மூடிவிட வேண்டும். இது எறும்புகள் வீட்டுக்குள் நுழைந்து கூடு கட்டுவதைத் தடுக்கும். வீட்டில் விரிசல்கள் பெரியதாக இருந்தால் புட்டி பயன்படுத்தி அவற்றை அடைத்து விடுங்கள்.
உங்களுக்கு விரைவான தீர்வு வேண்டுமெனில் சந்தையில் பலவகையான எறும்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளை வீட்டில் தெளித்தால் எறும்புகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். இது தவிர எறும்புகளை ஈர்க்கும் பொறிகளும் உள்ளன. இதன் மூலமாக எறும்புகளை கட்டுப்படுத்த முடியும்.
மேற்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் எறும்புகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு வீட்டில் எறும்புகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக எறும்பு தொல்லையில் இருந்து விடுபட்டு வீட்டில் நிம்மதியாக வாழுங்கள்.