மழைக்காலம் என்பது கொளுத்தும் கோடை வெப்பத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளித்தாலும், அதிகப்படியான ஈரப்பதம், சேறு, சகதி ஆகியவற்றைக் கொண்டு வருகிறது. இதனால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது சவாலானது. இருப்பினும் சில எளிய குறிப்புகள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்காலத்தில் சுத்தமான, சுகாதாரமான சூழலை நாம் பராமரிக்க முடியும். இந்தப் பதிவில் மழைக்காலங்களில் உங்கள் வீட்டை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில பயனுள்ள குறிப்புகளைப் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் உங்களது வீட்டை சுத்தமாக வைத்திருக்க முதலில் வீட்டில் அதிகபடியாக இருக்கும் தேவையில்லாத பொருட்களை நீக்குங்கள். தூசி அதிகமாக குவியம் அல்லது சுத்தம் செய்யக் கடினமாக இருக்கும் பொருட்களை அகற்றவும். தேவையான பொருட்களை மட்டும் அறையில் வைத்துக்கொண்டு தேவையில்லாத விஷயங்களை, வேர் அறைக்கு மாற்றுங்கள்.
பொதுவாகவே மழைக்காலங்களில் தூசி மற்றும் ஈரப்பதம் ஒன்றாக சேர்ந்து ஆங்காங்கே அழுக்குகளை சேர்க்கும். எனவே அவ்வப்போது வீட்டில் சேரும் அழுக்குகளை துணியைப் பயன்படுத்தி துடைத்து விடுங்கள். குறிப்பாக வீட்டு வாசலில் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
ஈரப்பதமானது பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால் விரும்பத்தகாத நாற்றங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வீட்டில் உள்ள காற்று வெளியே போகும்படி ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். வீட்டில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன்களை ஆன் செய்து, போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும். குறிப்பாக வீட்டில் ஈரமாகும் பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்து உலர வைக்கவும்.
வீட்டின் உள்ளே ஈரப்பதம் வராமல் இருக்க, வாயிலில் மேட் போட்டு வையுங்கள். இதனால் வெளியே சென்று விட்டு உள்ளேவரும்போது அதிகப்படியான ஈரம் வீட்டின் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
மழைக்காலத்தில் சாக்கடை மற்றும் வடிகால்கள் அடைத்துக் கொண்டு வீட்டில் நீர்க்கசிவு ஏற்படலாம். எனவே வீட்டில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறும் வழியை பராமரிக்கவும். இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க கழிவு நீர் வெளியேறும் பாதைகளை தவறாமல் சுத்தம் செய்து பாராமரிக்கவும்.
துர்நாற்றம் மற்றும் புஞ்சை வளர்ச்சியை தடுக்க துணிகளைத் துவைத்ததும் உடனடியாக காய வைக்கவும். அவற்றில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, மெத்தைகள் மற்றும் தலையணைகளை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கவும்.
மழைக்காலம் கொசுக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற பூச்சிகளை வீட்டின் உள்ளே ஈர்க்கிறது. எனவே உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும் குப்பைகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும். பூச்சிகள் உள்ளே நுழையும் விரிசல்கள் போன்றவற்றை அடைக்கவும். கொசு நுழைவதைத் தடுக்க ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை, கொசுவிரட்டி அல்லது ஸ்கிரீன்களைப் பயன்படுத்தவும்.
இந்த உதவி குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கலாம்.