

கட்டு சாதக் கூடை என்பது தமிழ் பாரம்பரியத்தில், குறிப்பாக பிராமணர்களின் திருமணச் சடங்குகளில் முக்கிய இடம் பிடிக்கும் அழகான ஒரு உணவுக் கூடையாகும். மணப்பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, அவளுக்குப் பிடித்தமான உணவுகளை ஒரு மூங்கில் கூடையில் வைத்துக் கொடுக்கும் வழக்கம் உள்ளது.
இது அவளுக்கு பெற்றோரின் நினைவையும், ஆறுதலையும் தரக்கூடிய பாரம்பரிய உணவாக போற்றப்பட்டது. முன்பெல்லாம் கட்டு சாதக்கூடை என்றால் சர்க்கரைப் பொங்கல், புளியஞ் சாதம், தயிர் சாதம், கருவடாம், மோர் மிளகாய் என கட்டிக் கொடுப்பார்கள். எண்ணெய் மிளகாய்ப் பொடியில் குளித்த இட்லி கட்டாயம் இருக்கும்.
திருமண வேலைகளால் மணமகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் மிகவும் களைப்பாக இருப்பார்கள். புகுந்த வீட்டுக்குச் சென்ற முதல் நாளே சமையல் செய்யும் சுமை மணமகளுக்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த உணவு வழங்கப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.
மாட்டு வண்டி பயணமும் பாரம்பரிய வரலாறும்
முன்பெல்லாம் போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் விருந்தினர்களும் குடும்ப உறுப்பினர்களும் பல மைல் தூரம் நடந்து அல்லது மாட்டு வண்டியில் செல்லவேண்டி இருக்கும்.
அவர்கள் வீடு சென்றடையும் வரை வழியில் சாப்பிடுவதற்காக உணவுகளைக் கட்டி தரும் வழக்கம் இருந்தது. போக்குவரத்து வசதி நிறைந்த இக்காலத்திலும் கட்டு சாதக் கூடை வழக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் அழகான மூங்கில் கூடையில் வாழை இலையை பரப்பி விதவிதமான ஐட்டங்களை கட்டித் தருவார்கள். கலந்த சாதங்கள், இட்லி மிளகாய் பொடியுடன், ஊறுகாய், வத்தல் வடாம் வகைகள், அப்பளம் போன்றவையும் இருக்கும்.
சிறிது காலம் கழித்து தனித்தனி பொட்டலமாக கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் டிஸ்போசபிள் அலுமினியம் ஃபாயில் டப்பாக்கள் வந்தது. இப்பொழுதோ டிஸ்போசபிள் பிளாஸ்டிக் டப்பாக்களில் கல்யாணம் முடிந்த அன்றே தரப்படுகிறது.
இப்போது பயண நேரங்கள் குறைந்துவிட்ட பொழுதிலும் இந்த பாரம்பரியம் இன்னும் வழக்கத்தில் உள்ளது. பல திருமணங்களில் மணமகள் வீடு திரும்பும் நாளில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த 'கட்டு சாதக் கூடை' உணவுகளை வாழை இலையில் பரிமாறி உபசரிக்கும் வழக்கமாக இப்போது இது ஒரு புது வடிவம் பெற்றுள்ளது.
டிபன் கேரியர் மற்றும் ஸ்டேஷன் டெலிவரியாக மாறிய கட்டு சாதக் கூடை
முன்பெல்லாம் 3 நாட்கள் கல்யாணம் முடிந்ததும் ஊருக்கு புறப்படுபவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டு சாதக் கூடை இன்று கல்யாணம் முடிந்த உடனே ஊருக்கு கிளம்புபவர்களுக்குக் கூட பேக் செய்து தரப்படுகிறது.
ஊருக்கு செல்பவர்கள் மட்டுமல்ல உள்ளூரில் இருப்பவர்களும் ராத்திரி யார் சமைக்கிறது என்று வாங்கிச்செல்வது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் ஒரு நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். அடுத்த நாள் கட்டு சாதக் கூடைக்கு(கேட்டரரின் வித்தியாசமான முயற்சி) ஆளுக்கு ஒரு சின்ன டிபன் கேரியரில் கட்டி கொடுத்து அனுப்பியது அசத்தலாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
ஸ்டேஷன் டெலிவரி சாப்பாட்டுக் கூடை:
இப்போதெல்லாம் கல்யாண மண்டபம் ரொம்ப காஸ்டிலியாக இருப்பதால் ஒரே நாளில் ரிசப்ஷன், கல்யாணம் என்று முடித்துவிட்டு கிளம்பும் பொழுது வெளியூரில் இருக்கும் உறவினர்களுக்கும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கும் (அவர்களும் வெளியூரில் இருக்கிறார்கள்) லக்கேஜ் ஜாஸ்தி இருக்கும் என்பதால் நேராக ஸ்டேஷனுக்கே கட்டு சாதம் போயாச்சு!
இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அவர்களை வழியனுப்பச் சென்ற எங்களுக்கும் (கணவன் மனைவி இருவருக்கும்) ஆளுக்கொரு கட்டு சாதக்கூடை தந்துவிட்டார்கள். அசத்தலான ஐடியாவாக இருந்தது இந்த ஸ்டேஷன் டெலிவரி சாப்பாட்டு கூடை.
டிஜிட்டல் காலத்திலும் ஆன்லைனில் கலக்கும் கட்டு சாதக் கூடை
ஆன்லைனில் திருமணம் செய்து கொள்பவர்கள் எப்படி கட்டு சாதக் கூடை சாப்பாட்டை சாப்பிட முடியும் என்கிறீர்களா?
உண்டே அதற்கும் வழி உண்டே! திருமணத்துக்கு முன்பே கேட்டரிங் நிறுவனங்கள் மூலம் விருந்தினர்களின் முகவரி மற்றும் எண்ணிக்கு ஏற்ப உணவை புக் செய்து, மணமக்கள் இருக்கும் இடம் அல்லது ஆன்லைன் திருமணத்தைப் பார்க்கும் விருந்தினர்களின் வீடுகளுக்கே இந்த உணவுக் கூடைகள் டெலிவரி வாகனங்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
இதனால் ஆன்லைனில் நடக்கும் திருமண நிகழ்வைக் காணொளியில் பார்த்துக்கொண்டே, தொலைதூரத்தில் இருந்தாலும் பாரம்பரியமான கல்யாண சாப்பாட்டை சுவைக்க முடியும்!
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், தமிழர்களின் ஆகச்சிறந்த உணவுப் பாரம்பரியத்தின் ஆழமான பின்னணியைப் புரிந்துகொண்டு, இன்றைய நவீன திருமணங்களிலும் நம் கலாச்சார அடையாளத்தை வழுவாமல் எப்படி புதுமையாகப் பயன்படுத்தலாம் என்கிற அருமையான யோசனைகளையும், விருந்தோம்பல் உத்திகளையும் நீங்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.