வீடு குடும்பம் : கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் முறிவு இல்லை
மனித உறவுகளிலேயே கணவன் மனைவி உறவு என்பது ஒரு அற்புதமான உறவு என்றுதான் சொல்ல வேண்டும். தாய், தந்தையர் நம்மை வளர்த்து ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தப் பெண் நம்மை வழிநடத்தும் பொழுது இருவருமே தடம் மாறாமல் தடுமாறாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, எதையும் கலந்து ஆலோசித்து ஒளிவு மறைவு இன்றி வாழ தொடங்கினாலே போதும், குடும்பம் என்ற ஆலமரத்தில் கணவன் மனைவி இரு கிளைகளும் கடைசிவரை முறியாமல் இருக்கும்.
கணவன்-மனைவி உறவு என்பது :
தெளிந்த எண்ணமும், எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் தன்மையும் உடைய எந்தக் கணவன், மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது. இருந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் சண்டை வருகிறது. இப்போது இதெல்லாம் இந்த உலகத்தில் ரொம்ப சாதரணமாகப் போய் விட்டது.
எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவது ஒன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது, கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாகப் பற்றியெரிகின்றன.
பிறகு இருவரும் சில வாரம் மௌன விரதம் எடுத்துக் கொள்கிறார்கள். துளிகூட வாய் திறக்க மாட்டார்கள். நாளாக நாளாகக் கோபம் மெதுமெதுவாக தணிகிறது, ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது சமாதானமாகி விடுகிறார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு எவ்வளவு சண்டை வந்தாலும் சமாதானமாக இருக்க முடியும்.
குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா? புயல் அடிக்குமா? என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய துயரமான நிலை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும்.
எப்படி?
இரண்டு பேரும் ஏட்டிக்குப் போட்டி பேசிக்கொண்டே இருந்தால் தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். உங்கள் கோபத்தைக் கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை, குடும்பத்தில் சண்டை இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது தான் முக்கியம்
கோபத்தில் யோசிக்காமல் எதையாவது பேசி இருக்கலாம் அல்லது அவர்களுடைய மனம் காயப்பட்டதால் அப்படிப் பேசி இருப்பார்கள். அதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
கணவன் மனைவி உறவில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று. மனைவி சொல்வதை கணவன் புரிந்து கொள்வதும், கணவன் சொல்வதை மனைவி புரிந்து கொள்வதும் என்பது மிக மிக முக்கியமானது. இதில் இருவரில் யாரேனும் ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் இருந்தால் அங்கே தான் பிரச்சனைகள் தொடங்குகிறது.