

பொதுவாக எல்லோர் வீட்டிலும் அழகிற்காக சுவர்களில் புகைப்படங்களை மாட்டுகிறோம். வெளியில் இருந்து வரும் உறவினர்களை அந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்கின்றன. அதிலும் கணவன் மனைவி இணைந்து தம்பதியாக இருக்கும் புகைப்படங்கள் இல்லாத வீடு இல்லை எனலாம். ஆனால் தம்பதியரின் புகைப்படத்தை வாஸ்துபடி சரியான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் தம்பதியரின் புகைப்படங்கள் வைப்பதற்கான குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
புகைப்படமும் சட்டமும்
தம்பதியாக இருக்கும் புகைப்படங்களில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்க வேண்டும். இது தம்பதியின ருக்கிடையே அன்பை அதிகரிப்பதோடு வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும். மேலும் பிரேம் பழையதாகவோ, நிறம் மங்கியதாகவோ இல்லாமல் எப்போதும் புதிதாக அழகுடன் கவர்ச்சிகரமான இருக்கும் சட்டகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தம்பதியர் இருக்கும் புகைப்படங்களில் முன்னோர்களோ, குழந்தைகளோ இல்லாமல் கணவன் மனைவி மட்டும் இருக்கும் புகைப்படங்களை வைக்க வேண்டும். புகைப்படங்கள் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் பார்ப்பதற்கு நடுத்தர அளவில் புகைப்படம் வைப்பது வாஸ்து சாஸ்திரப்படி நல்லதாகப் பார்க்கப்படுகிறது. உடைந்த சட்டகங்கள் எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதால் எக்காரணம் கொண்டும் அவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.
புகைப்படம் வைக்கக்கூடாத இடங்கள்
தம்பதியர் இருக்கும் புகைப்படங்களை படுக்கையறைக்கு எதிரில் உள்ள சுவரில் வைப்பது வாஸ்து சாஸ்திரப்படி தடை செய்யப்பட்டதாக உள்ளது. மேலும் பூஜை அறைக்கு நேர் எதிரேயும், கழிப்பறை அல்லது குளியலறையின் சுவர்களிலும் தம்பதியர் புகைப்படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டின் பிரதான வாசலுக்கு நேர் எதிரே கணவன் மனைவி புகைப்படங்கள் வைப்பது வீட்டிற்கு உகந்ததல்ல.
தவறான இடத்தில் வைத்தால்...
கணவன் மனைவி தம்பதியர் புகைப்படங்களை தவறான திசை மற்றும் அசுபமான இடத்தில் வைக்கும்போது வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு தம்பதிக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் உருவாகும். மேலும் நிதி சிக்கல்களும், உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி உறவே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுவிடும்.
புகைப்படங்களை வாஸ்து சாஸ்திரப்படி நிறுவுவதால் கிடைக்கும் நன்மைகள்
கணவன் மனைவி தம்பதியாக இருக்கும் புகைப் படங்களை வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான விதிகளை பின்பற்றி சுவர்களில் வைக்கும் போது வீடு கோவிலாக மாறுகிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரித்து பிணைப்பு உருவாகி மகிழ்ச்சியில் திளைப்பர். மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் உருவாகி லட்சுமி தேவியின் அருளால் பொருளாதாரம் மேம்பட்டு குடும்பத்தில் அமைதி நிலவும்.
வாஸ்து குறைபாடுகளை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்
வீட்டின் சுவரில் மாட்டி இருக்கும் புகைப்படங்களில் தூசி படியாதவாறு அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது. மேலும் வருடத்திற்கு ஒரு முறை பழைய பிரேமை மாற்றி விட்டு புதிய பிரேம் பொருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் புகைப்படம் எப்பொழுதும் பளிச்சென காட்சி தந்து வீட்டில் அமைதி நிலவும். பழைய மற்றும் கிழிந்த புகைப்படங்களை அகற்றிவிட்டு இப்போதுள்ள புதிய படங்களில் ஃபிரேம் போட்டு வைப்பது மேலும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.