‘ஆண்டவன் படைப்பில் மனித மனம் என்பது ஒரு அருமையான, அற்புதமான விஷயம். எந்த ஒரு எண்ணத்தையும் உள்வாங்கிக்கொண்டு, சரியான நேரத்தில் அதை செயல்படுத்தக்கூடிய அபூர்வ சக்தி அதற்கு உண்டு’ என்கிறார் சுவாமி தயானந்த சரஸ்வதி.
எனது தோழியின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. அப்பொழுது அவள் சித்தப்பாவிடம், ‘பப்பா நான் பிறந்ததிலிருந்து அம்மா மடியில் தவழ்ந்ததோ, அப்பா கைகோர்த்து நடந்ததோ மிகவும் குறைவு. எல்லாமே நீங்கதான் பார்த்தீர்கள். ஆதலால், உங்கள் கையால் என் கையைப் பிடித்து அவர் கையில் கொடுங்கள்' என்று கோரிக்கை வைத்தாள்.
அதற்கு அவர், ‘தலை இருக்கும்பொழுது வால் ஆடக் கூடாதுடா. எனக்கு மூத்த அண்ணன்கள் இருவர் இருக்கையில், நான் உன் கையைப் பிடித்துக் கொடுப்பது முறையற்றது. பெரியப்பாதான் உனது கையைப் பிடித்துக் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் முதல் மரியாதையை நாம் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். அதுதான் முறை. அவரை விடுத்து அந்தச் செயலை நான் செய்தால் பெரியப்பா என்ன நினைத்துக் கொள்வார்? தனக்கு மனைவி இல்லாததால்தான் தம்பிகள் நம்மை புறக்கணிக்கிறார்களோ? என்று நினைத்துக்கொள்ள மாட்டாரா? ஆதலால், அவர் மனம் புண்படாதபடி இந்த சந்தோஷ தருணத்தில் அவரை சந்தோஷப்படுத்தி, நாமும் சந்தோஷமாக நற்காரியத்தை செய்வோமே’ என்று கூற, பெற்றோர்களை இழந்த அந்தப் பெண், அப்படியே அதை ஒப்புக்கொண்டாள். அவளின் பெரியப்பா கைபிடித்து கொடுக்க, திருமணம் இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்வு கீழ் வரும் கதையை படித்தபோது எனக்கு மனதில் நிழலாடியது. அதைப் பற்றிய குட்டிக் கதை இதோ:
ஒரு சமயம் நபிகள் நாயகம், அவருடைய தோழர்களான அபூபக்கர், உமர் ஆகியோரோடு உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை உமரின் மகனாகிய அப்துல்லா என்பவரும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நபிகள் நாயகம், "மனிதர்களைப் போல பெருமை உடையது, ஆண்டு முழுவதும் பலன் தருவது, பணியாத இலையும் வாடாத குலையும் கொண்டது. அது என்ன மரம்?" என்று கேட்டார்.
தோழர்கள் இருவருக்கும் அதற்கான விடை தெரியவில்லை. ஆனால், அப்துல்லாவிற்கு அந்த புதிருக்கான விடை, ‘பேரீச்ச மரம்’ என்பது தெரிந்து இருந்தது. இருந்தும் அதைச் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நபிகள் நாயகம் அந்தப் புதிருக்கான விடையையும் சொன்னார். தன் மகனுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் அமைதி காத்ததை அறிந்தார் உமர்.
"மகனே? நீ அப்பொழுதே அந்த விடையை சொல்வதற்கு என்ன? எனக்கும் அபூபக்கருக்கும் தெரியாத விடை, உனக்குத் தெரிந்து இருக்கிறது என்று மகிழ்ந்து இருப்பேனே. நபிகள் நாயகம் முன்னிலையில் உனது அறிவுக்கூர்மைக்கு பாராட்டு கிடைத்து இருக்குமே" என்றார்.
"தந்தையே, தாங்களும் மதிப்பிற்குரிய அபூபக்கரும் பதில் சொல்லாமல் இருந்தீர்கள். உங்களை முந்திக்கொண்டு நான் எப்படி பதில் சொல்வேன்? அப்படிச் சொன்னால் உங்களுக்கு மரியாதை குறைவு செய்ததாக ஆகிவிடாதா? அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று பதில் சொன்னார் அப்துல்லா.
இதைக் கேட்ட அவர், தனது மகனின் நற்பண்புகளை எண்ணி மகிழ்ந்தார்.
பிறருக்கு வணக்கம் கூறுவது, பிறரின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது, பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாகக் கேட்பது, தனது கருத்துக்களை தெளிவாகவும், பிறரின் மனம் புண்படாமலும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எடுத்து இயம்புவது போன்றவை மேன்மையான பண்புகள். அவற்றை அனைவரும் வளர்த்துக்கொள்வதால், குடும்ப உறவுகள் மேம்பட்டு அமைதியையும், உள்ளத்திற்கு மன மகிழ்வையும் கொடுக்கும்.