எதிலும் அவசரம், எங்கும் அவசரம் என்பதே எப்போது அனைவருக்கும் தாரக மந்திரமாக உள்ளது. ‘சீக்கிரம் சீக்கிரம்’ எனும் மனப்பான்மையில் பொறுமை எனும் குணம் ஏறத்தாழ நம்மிடமிருந்து விடைபெற்று வருகிறது. உணவு முதல் அலுவல் வரை ஒருவித அழுத்தங்கள் ஊடாகவே அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால் நாம் இழக்கும் மிக முக்கியமான பொக்கிஷம்தான், ‘மன அமைதி.’
இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கி விடுகிறது நம் வாழ்வின் மொத்த நிம்மதியுடன் வெற்றியும். ‘மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மட்டும் நமக்கு வசப்பட்டால் எதிலும், எங்கும் நமக்கு வெற்றியே. ஆனால், அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை என்பதே நிஜம். ‘வேகம், விவேகம்’ என்போம். அதேபோல்தான் பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்தித்து செயல்புரிவார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய பண்ணை வீட்டில் வசிக்கும் விவசாயி அவர். இவர் தாம் உயிராக நினைத்த கடிகாரம் ஒன்றை பல ஆண்டுகளாக தனது கையில் கட்டியிருந்தார். பலவகை உணர்வுகள், பல நல்ல தருணங்கள், வெற்றிகள் நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு.
ஒரு நாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகு பார்த்தால் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை. உடனே பரபரப்புடன் தான் வேலை செய்த விவசாயக் கிடங்குக்குள் போய் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு இருந்தவர் கண்களில் பட்டனர் வெளியே விளையாடிக் கொண்டு சிறுவர்கள். அவருக்கு உடனே யோசனை வந்தது. சிறுவர்களை அழைத்தார்.
"இந்தக் கிடங்குக்குள் எனது கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்" என்றதுதான் தாமதம், அவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனை பேரும் உள்ளே இருந்த வைக்கோல் போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு என ஒரு இடமும் விடாமல் தேடியும் கடிகாரம் சிக்கவில்லை. ஏமாற்றத்துடன் சோர்ந்து வெளியே வந்து அவரிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
அப்போது அதிலிருந்த ஒரு சிறுவன் மட்டும் தயங்கியபடியே அவரருகே வந்தான். "அய்யா! எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்தக் கடிகாரம் கிடைக்கிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான். அவரும் அனுமதி தர, சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள் ஆனது. கதவு திறந்து வெளியே வந்தவன் கையில் கடிகாரம் இருந்தது.
அவருக்கோ ஒரே வியப்பு. "தம்பி! நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாய்?’’ என்று கேட்க, "அய்யா! நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி ஐந்து நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்... டிக்... டிக்...’ ஒலி கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை கண்டு பிடித்தேன்" என்றான்.
விவசாயி ஆச்சர்யத்தில் ஆழ்ந்து அவனின் அமைதியான வெற்றிக்குப் பரிசுகளைப் தந்து மகிழ்ந்தார்.
நாமும் நமது பரபரப்பான சூழலிலிருந்து விலகி, சிறிது நேரத்தை மனதை அமைதிப்படுத்த தினமும் முயல்வோம். மன அமைதி பெறும்போது முன்பை விடத் தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நாம் அனுபவத்தினால் அறிவோம்.
பதற்றமற்ற மன அமைதி ஆரோக்கியமான உடலுடன் உறுதியான மனதும் தந்து வெற்றிக்கான வழியை நமக்குக் காட்டும் என்பது நிச்சயம்.