புதிதாக வீட்டு மனை வாங்கணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?

புதிதாக வீட்டு மனை வாங்கணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?
Published on

ம்மில் பலருக்கு சொந்தமாக இடம் வாங்கி அங்கு வீடு கட்ட வேண்டும் என ஆசை இருக்கும். ஏற்கனவே சொந்த வீடு இருந்தாலும், இன்னும் கூடுதலாக நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அப்படி சொந்தமாக இடம் வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கொஞ்சம் ஏமார்ந்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். எனவே ஒரு சொத்தை வாங்கும் முன்பு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

புதிதாக வீட்டு மனைகள் வாங்கும்போது சொத்தின் நில உரிமைப் பட்டா, கிரயம் எழுதிக் கொடுப்பவரின் பெயரில் கட்டாயம் இருக்க வேண்டும். சொத்தின் நில உரிமைப் பட்டா யார் பெயரில் உள்ளது என்பதனை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தின் புல எண் (சர்வே நெம்பர்) ஆனது, பட்டா இடமா? புறம்போக்கு இடமா? ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமான இடமா? என்று கிராம நிர்வாக அலுவலருடன் (வி.ஏ.ஓ) தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி அதன் பரப்பளவு, கிராம வரைபடத்தின்படி சரியாக உள்ளதா? ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி புல எண்களும், வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள புல எண்களும் சரியாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மேற்படி சொத்தின் உரிமையாளர், உண்மையான உரிமையாளரா என்பதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். கிரயம் பெற இருக்கும் சொத்தினுடைய புல எண்ணில் ஏதேனும் வில்லங்கள் உள்ளதா என்று, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று மனு செய்து சான்றிதழ் பெற்று வில்லங்கம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் முப்பது ஆண்டுகளுக்கு குறையாமல் வில்லங்கச் சான்று பெறுவது நல்லது.

லே-அவுட் போடப்பட்டு, அதன் அடிப்படையில் வீட்டு மனைகள் வாங்கும்போது மேற்படி மனையானது ஊரமைப்பு இயக்குனரால் (Director of Town Planing) முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டும். சொத்தினைக் கிரயம் செய்பவர் அன்னாரால் கிரயம் வாங்கப்பட்டபோது, அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புல எண்களும், அளவுகளும் தற்போது கிரயம் செய்பவரின் ஆவணத்தில் தவறின்றி எழுதப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

சொத்தினைக் கிரயம் பெறும்போது, கிரய உடன் படிக்கைப் பத்திரம் எழுதிக்கொண்டால், அந்த உடன்படிக்கை ஆவணத்தைப் பதிவு செய்துகொள்வது பாதுகாப்பானது. அவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்ய இயலாமல் போய்விட்டால், அந்தக் கிரயப் பத்திரத்தில் பேசி முடித்துள்ள தொகைக்குக் குறையாமல் கிரயப் பத்திரத்தை எழுதிப் பதிவு செய்வது எதிர் காலத்துக்கு நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் வங்கிகளில் கடன் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும். சொத்தினைக் கிரயம் வாங்கும்போது சொத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையெனில், அவரது இறப்புச் சான்று, அவரது வாரிசுகள் சான்று மிகவும் தேவை.

இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி அவரது மகன்கள் மற்றும் மகள்கள் என்று வேறுபாடின்றி அனைவருக்கும் அவரது சொத்தில் பூரண உரிமை உண்டு. கணவன் பெயரில் சொத்து இருந்து அவர் இறந்துவிட்டால், அவரது மனைவி மற்றும் மகன்கள், மகள்கள் ஆகியோரிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயப் பத்திரத்தில் நேரடியாகக் கையெழுத்துப் பெற வேண்டும். மனைவி பெயரில் சொத்து இருந்து அவர் இறந்துவிட்டால், அவரது கணவர் மற்றும் மகன்கள், மகள்கள் ஆகியோரிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயப் பத்திரத்தில் நேரடியாகக் கையெழுத்துப் பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com