பூமியில் பிறந்த அனைவரின் ஆசையுமே, கவலைகள் ஏதுமின்றி எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். பறவைகள், விலங்குகளைப் பாருங்கள். அவை எப்போதும் மகிழ்ச்சிகரமாக இங்கும் அங்கும் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.
நம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்றால் அதற்கு முதல் காரணம் நாம்தான் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று பாடி வைத்துச் சென்றிருக்கிறார்கள். நம் வாழ்க்கையில் ஒரு பிரச்னை நம்மைத் தேடி வருகிறது என்றால் அதற்கான முதல் காரணம் நாமாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இனி, நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்களுக்குத் தெரிந்த யாராவதோ அல்லது உறவினர்களோ வீடு வாங்குகிறார்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை எடுத்து சிறந்த கல்லூரியில் சேருகிறார்கள் அல்லது அவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கிறது என வைத்துக் கொள்ளுவோம். பொதுவாக, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நம்மில் பலர் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். அல்லது பெருமூச்சு விடுகிறோம். அந்த பலரில் நீங்கள் ஒருவராக இருந்தால் இதை முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டும். உடனடியாக அவர்களை சந்தித்து மனதார ஒரு வாழ்த்தைத் தெரிவித்து விடுங்கள். அல்லது தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுங்கள். அவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மாறாக, அவர்களைப் பாராட்டுவதன் மூலம் உங்களைப் பற்றிய நல்ல எண்ணம் அவர்கள் மனதில் ஏற்பட்டு பிற்காலத்தில் அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதாவது காரியம் நடைபெற வேண்டும் என்றால் அவர்களும் உங்களுக்கு அதை மனதாரச் செய்வார்கள்.
மனதை எப்போதும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ளுங்கள். சிலர் எப்போதும் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுபவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கும் வந்து விடும். எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சிகரமான மனநிலை உள்ளவர்களாக இருப்பார்கள்.
வெளியில் செல்லும்போது பலரை சந்திப்பீர்கள். அவர்கள் முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து சினேகமாக புன்னகைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தெரிந்தவர்களாக இருந்தால் ஒரு ஹலோ சொல்லுங்கள். பல வெளிநாடுகளில் முன்பின் தெரியாதவர்களைக் கண்டால் கூட புன்னகைத்து ஹலோ சொல்லுவது வழக்கம்.
சிலருக்கு நிறைய வசதி இருந்தாலும் திருப்தி இன்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைக் கண்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அந்த மனநிலை உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அதனால் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைத் தொலைப்பது நிச்சயம்.
பாசிட்டிவான நல்ல விஷயங்களைப் பற்றியே எப்போதும் பேசுங்கள். நெகட்டிவான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். பிறரைப் பற்றி புறம் கூறுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காதீர்கள். இருப்பதை வைத்து எளிமையாக வாழ்ந்து சமாளிக்கப் பாருங்கள். அப்படியே கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ கடன் வாங்காதீர்கள்.
அதேபோல், யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஆரம்பத்திலேயே நாசூக்காக மறுத்து விடுங்கள். கடன் கொடுத்து நிம்மதியை இழந்தவர்கள் ஏராளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். தற்போதைய உலகில் அறிவுரையை ஏற்கும் மனநிலையில் யாரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உறவினருக்கோ நண்பருக்கோ என யாருக்காவது உதவி செய்தால் அவர் உங்களுக்கு பதிலுக்கு ஏதாவது உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர், உங்களிடம் நன்றியோடு இருப்பார் என்றும் எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்த்தால் உங்கள் மகிழ்ச்சி போய்விடும்.
இதையெல்லாம் படிப்படியாகக் கடைபிடித்துப் பாருங்கள். அப்புறம் உங்களைப் போல மகிழ்ச்சியான மனிதர் எவரும் இல்லை என்று அனைவரும் சொல்லுவது நிச்சயம்.