
இந்த உலகம் வண்ணங்களால் ஆனது. வண்ணங்களை பற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் உலகின் பலதரப்பட்ட மக்களின் விருப்பமாக இருக்கும் நிறம் நீலம்தான். உலகில் 40 சதவீதம் மக்கள் விரும்பும் நிறம் நீலநிறம்தான். அதனையடுத்து சிவப்பு நிறமும், அதனைத் தொடர்ந்து பச்சை நிறமும் உள்ளது. பிறக்கும் குழந்தைகள் பார்க்கும் முதல் நிறமே சிவப்புதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு வீட்டின் அறையில் அடித்திருக்கும் வர்ணத்திற்கும் அதனுள் வசிப்பவர்களின் மன நிலைக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புளோரோ இன்ஸ்டிடியூட் ஆப் நிரோ சயின்ஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அந்த ஆய்வின்படி வீட்டினுள் இளம் பச்சை மற்றும் நீல வர்ணம் பூசப்பட்டு இருந்தால் அங்கு அமைதியான மனநிலை நிலவும் என்பதையும், அதற்கு பதிலாக மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பிங்க் வர்ணம் பூசப்பட்டு இருந்தால் இதய படபடப்பு அதிகரிக்கும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
குளியலறை சுவர்கள் எப்போதுமே நீல நிறத்தில் இருப்பது சிறப்பு... டைல்ஸ் பதிவதாக இருந்தாலும்சரி, அதுவும் நீல நிறத்திலேயே பதிந்து கொள்ளலாம்.குளியலறையில் உபயோகப்படுத்தும் பக்கெட்டுகள், மக்குகள், போன்றவையும் நீல நிறத்தில் வைத்திருக்கலாம். அல்லது பச்சை கலர் பக்கெட்டுகளை உபயோகிக்கலாம். குளியலறையில் பச்சை டைல்ஸ்களையும் பொருத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கருப்பு கலர் பக்கெட்டுகளை மட்டும் பாத்ரூமுக்குள் வைக்கக்கூடாது.
சமையல் அறைக்கு சிவப்பு வண்ணமும், வரவேற்பு அறைக்கு மஞ்சள் நிறமும், உணவு உண்ணும் அறையில் நீல வண்ணமும், உடற்பயிற்சி செய்யும் அறைக்கு ஆரஞ்சு நிறமும், படுக்கை அறைக்கு இளம் சிகப்பு நிறமும் சிறந்தது என்கிறார்கள்.
வெள்ளை நிறம் தூய்மையான மனநிலையை தரும். அதேவேளையில் பாதுகாப்பு தரும் நிறமாக வெள்ளை நிறம் கருதப்படுகிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் வீடுகளுக்கு வருடந்தோறும் வெள்ளை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். கார் மற்றும் வாகனங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் விபத்துகள் குறையும் என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதே வேளையில் சாம்பல் நிறம் சோம்பல் உணர்வை தருகிறது என்கிறார்கள்.
பச்சை நிறத்தை பார்க்கும்போது நமது மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. சிவப்பு நிறம் துணிச்சலை தரும், மஞ்சள் நிறம் தன்னம்பிக்கை தரும், ஊதா நிறம் தியானம் தரும் அமைதியை தரும், ஆரஞ்சு நிறம் செயல் திறனை தூண்டும் என்கிறார்கள்.
இளம் சிவப்பு நிறமான பிங்க் வர்ணம் வலி நிவாரணி நிறமாக கருதப்படுகிறது. கோபம் மற்றும் கவலையை போக்கும் தன்மை இந்த நிறத்திற்கு இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதனால்தான் உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறைச்சாலைகள் மற்றும் மன நோயாளிகளின் அறைகள் பிங்க் நிறத்தில் உள்ளது. உங்கள் வீட்டில் தியானம் செய்ய தனியாக அறை இருந்தால் அதற்கு பிங்க் நிற வர்ணம் பூசுங்கள் என்கிறார்கள்.
உங்கள் வீட்டில் உடல் நலம் இல்லாமல் இருப்பவர்கள் இருந்தால் அவர்கள் இருக்கும் அறைக்கு ஆரஞ்சு நிற வர்ணம் பூசுவது நல்லது. காரணம் ஆரஞ்சு நிறம் நோய்களை விரைவில் குணமாக்கும் என்கிறார்கள். ஆரஞ்சு நிறத்திற்கு நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு என்கிறார்கள்.
மஞ்சள் நிறத்திற்கு புத்துணர்ச்சியும், செயல் திறனும், குறிக்கோளை அடைந்து வெற்றி பெறவேண்டும் என்ற ஒருங்கிணைந்த தீவிர முயற்சிக்கான வேகமும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. மஞ்சள் நிறம் மூளையில் செரோடோனின் என்ற மகிழ்ச்சிக்கான வேதிப்பொருளை வெளியிட உதவுகிறது.
இது மன அழுத்தம் மற்றும் பய உணர்வை அகற்றி மனநிலை நிலைப்படுத்தியாக செயல்படுகிறது, இதனால் உங்கள் குழந்தைகள் படிக்கும் அறை,டைனிங் டேபிள் இருக்கும் அறை மற்றும் விளையாட்டு அறையில் மஞ்சள் வர்ணம் அடிப்பது நல்லது என்கிறார்கள்.