
வீ ட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும்தான் `ஸ்டேட்டஸ்' என்ற பெயரில் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.
இன்னும் பலருக்கு வேலையே இணையதளத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையதளத்தில் வேலை செய்யும் அளவுக்கு இணையதளம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. தற்போது வேலை செய்ய வேண்டிய நேரத்தில் ‘யூடியூப்பிலும்’, பேஸ்புக்கிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையதளத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழியாகும்.
இணையதளத்தில் நம் தேவைக்கு அதிகமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், பேஸ்புக் மெசஞ்சர் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன.
இதுமட்டுமல்லாமல், சாட் வசதி எல்லா பக்கமும் அதிகரித்து கொண்டே இருப்பதால், ‘ஹாய்’ எனத் தொடங்கி ‘பை’ என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.
இணையதளங்களில் உலாவும்போதும், பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். ‘பாப்-அப்’ எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.
ஏதோ உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேர விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.
‘மல்டி டாஸ்கிங்' எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் சாட், குழு விவாதங்களில் பங்கேற்பது, இணையதள விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.
இணையதளத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். நம் மூளையை பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும்.
இணையதளம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.