இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மகிழ்ச்சிக்கு வழி!

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மகிழ்ச்சிக்கு வழி!

வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம்தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை நாமே உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப்போகும். ஆம்! சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறைபொருள்.

வெற்றிப்பாதையில் பயணிக்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. தெளிந்த நீரோடை போல மனது இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இதில் மிக முக்கியமானது, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக்கொள்வது.

வாழ்வில் அனைத்தும் குறைவில்லாமல் கிடைத்தால்தான் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று ஒருவர் எண்ணினால் அது சாத்தியமில்லை. காரணம், குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் உண்மை. நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக அழிக்கக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அல்ல. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. உங்களுக்குத் தேவையான சூழ்நிலையை நீங்களே உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். ஒரு மலரை உங்களால் மலரச் செய்ய முடியாது. ஆனால், அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால் ஒன்றல்ல, ஓராயிரம் பூக்கள் மலரும். மகிழ்வோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பது நம்மிடமே உள்ளது.

மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். அடுத்து, நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். வாழ்க்கையைத் தள்ளி நின்று ரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் சிக்கல்களை தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகி விடும். நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது, மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றிகொள்ளச் செய்யும். பெற்ற சிறிய வெற்றியையும் மனம் மகிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா என்ன?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com