இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பள்ளி, நட்பு வட்டம், சமூகம், மற்றும் சமூக வலைதளங்கள் என எல்லாமும் சேர்ந்து ஏகப்பட்ட மன அழுத்தத்தைத் தருகின்றன. அவற்றை சமாளிக்க பெற்றோர்களுக்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. டீனேஜ் பிள்ளைகளின் மன அழுத்தத்தை சமாளிக்கக்கூடிய வழிமுறைகளை பெற்றோர் எப்படி உருவாக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பாதுகாப்பு உணர்வு: டீன் ஏஜ் பிள்ளைகள் தங்கள் உணர்வுகளையும் கவலைகளையும் நினைத்து அஞ்சாமல் பெற்றோரிடம் வெளிப்படுத்த ஏதுவான பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். அவர்களின் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். தோழமை உணர்வுடன் அவர்களை நடத்தும்போது பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்கள் பேசும்போது முழு கவனத்தையும் செலுத்தி கண் தொடர்புகளை பேணுவதன் மூலமும் சிந்தனையுடன் பதில் அளிப்பதன் மூலமாகவும், அவர்களது உணர்வை சரியாக புரிந்துகொள்ள முடியும்.
உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்: பிள்ளைகளை விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி நடைப்பயிற்சி போன்றவற்றில் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும்போது உடல் எண்டார்ஃபின்களை வெளியிடுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து, மனநிலை மேம்பாட்டிற்கு உதவும். அதுபோலவே தியானம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி நிறைவாற்றல் நுட்பங்கள் போன்றவையும் அவர்களின் பதற்றத்தை தணிக்க உதவும்.
அவர்களின் அழுத்தத்தை அறிந்து கொள்ளுதல்: கல்வி சார்ந்த பள்ளி செயல்பாடுகள் அவர்களுக்கு எந்தளவு அழுத்தத்தை தருகிறது என்பதை பெற்றோர் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல அவர்களது ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்று கண்டறிந்து படிப்பிற்கும் ஒய்வு நேரத்திற்கும் இடையேயான ஆரோக்கியமான சமநிலையை கண்டறிய உதவ வேண்டும். நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பது அல்லது ஓய்வு நேரம் முழுவதும் டிவி பார்த்துக் கொண்டோ அல்லது போன் பார்த்துக் கொண்டு இருப்பது தவறு. படிப்பதற்கும் பொழுதுபோக்கிற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி விட்டு தேவையான ஓய்வு எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
பட்டியலை உருவாக்குதல்: எப்போதுமே டீனேஜ் பிள்ளைகள் படிப்பதற்கும் ஹோம் வொர்க் செய்வதற்கும் நேரம் போதவில்லை என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். அவர்களுக்கு நேர மேலாண்மையை கற்றுக் கொடுத்து செய்ய வேண்டிய பணிகளுக்கு ஏற்ற பட்டியலை உருவாக்க சொல்லித் தர வேண்டும். கடைசி நிமிட மன அழுத்தத்தை தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன் பணிகளை முடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
சமூகத் தொடர்புகளை வளர்த்தல்: தங்கள் டீனேஜ் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கு ஆரோக்கியமான நட்புகளை உருவாக்குவதற்கு வாய்ப்புகளை தர வேண்டும். வலுவான சமூக வலைப்பின்னல் மன அழுத்தம் நிறைந்த காலங்களில் ஆறுதலையும் புரிதலையும் அளிக்கும்.
மீடியா நுகர்வு குறித்து எச்சரிக்கை: அதிக நேரம் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கும். எனவே, அவர்களுக்கு நேர்மறையான வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பார்க்க ஊக்குவித்து எதிர்மறை செய்திகள் மற்றும் வெறுப்பு கண்டன்டுகளிலிருந்து விலகியிருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.
கல்விச் சுமைகளை மதிப்பிட வேண்டும்: ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு விதமான ஆர்வமும், கற்கும் திறனும் இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் பிள்ளைகளை மதிப்பெண் ரீதியில் எடை போடுகிறார்களா என்பதை கவனித்து அறிய வேண்டும். மேலும், அதிகமான ப்ராஜெக்ட், ஹோம் ஒர்க் போன்றவை தரப்பட்டால் அதற்காக ஆசிரியர்களிடம் பணிச்சுமையை குறைக்க வாதிடலாம்.
குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்: வாரத்தில் ஒருமுறையாவது குடும்பத்துடன் சேர்ந்து உண்ணவும், சிறிது நேரம் விளையாட்டில் ஈடுபடவும் நேரம் செலவழிக்க வேண்டும். ஒன்றாக திரைப்படம் பார்ப்பது, குடும்ப நிகழ்வுகளில் ஈடுபடுவது போன்றவை மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும். தங்கள் குடும்பமே தங்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்கிற ஆறுதலையும் தரும்.