
தன்னம்பிக்கை உடல் மாதிரி. கடவுள் நம்பிக்கை உயிர் மாதிரி. எந்த எல்லை வர தன்னம்பிக்கை இருக்கலாம். எந்த எல்லையில் தன்னம்பிக்கை இருக்கலாம், எந்த எல்லையில் அது கடவுள் நம்பிக்கையாக மாற வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்டால் நமது வாழ்க்கை இனிமையாகவும் விவேகமாகவும் இருக்கும்.
உனக்குப் புண் இல்லாத பட்சத்தில் உன் மீது ஒருவன் உப்பைக் கொட்டினாலும் உனக்கு எரியாது என்கிற பழமொழி எவ்வளவு உண்மை தெரியுமா?
நெஞ்சை நிமிர்த்துங்கள். சுதந்திரமாகச் சுவாசியுங்கள். பிராண வாயுவை நுரையிரலின் ஒவ்வொரு அங்குலத்திலும் சேமியுங்கள். புன்னகைப் பூக்களை உதடுகளில் பூக்க விடுங்கள்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்... இன்று புதிதாய்ப் பிறந்தோம்... என்கிற பாரதியின் வேதத்தைப் பலமுறை... பலமுறை... பரவசமாகச் சொல்லுங்கள்.
நம்பிக்கை என்பது தொடக்கத்தில் ஒரு சின்னச் செடி. அதை ஆரம்பத்தில் யார் வேண்டுமானாலும் வெட்டி விடலாம். அதுவே வளர்ந்துவிட்டால்... அகலமாகப் படர்ந்துவிட்டால்...நம்பிக்கை விருட்சத்தை எவராலும் வெட்ட முடியாது.
பஞ்ச பூதங்களும் தனக்கு எதிராக இயங்குவதாகப் பாவித்துக்கொண்டு, தம்மைத் தோற்கடிப்பதற்காக பிரபஞ்ச இயக்கம் நிகழ்வதாகக் குழம்பிப் போய் சோர்வடைந்து தங்களைத் தாங்களே பலர் தோற்கடிக்கிறார்கள். நம்புங்கள் பஞ்ச பூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான்.
நமது நம்பிக்கைகள் வளர்ந்து, கம்பீரமான விருட்சமாக நின்றால், இந்த ஆட்டுக்கூட்டம் இதன் நிழலில் ஒதுங்க வரும்; குனிந்து பார்த்து கேலி பேசிய மூடவர்கள், நிமிர்ந்து பார்த்து “தலைவரே” என்பார்கள்.
ஒரு சிலர் யாராவது நமக்கு இரண்டு வார்த்தை ஆறுதலாகப் பேச மாட்டார்களா என்று எதிர் பார்க்கிறார்கள். வேண்டவே வேண்டாம். இந்த விஷ விருப்பம். ஆறுதல் வார்த்தை என்பது ஆபத்தான போதை மாத்திரை. அதற்கு அடிமையாக வேண்டாம். மந்திரதந்திர மதவாதிகள், குட்டிச்சாமிகள் அளவுக்கு மீறிய ஆறுதல் வார்த்தைகளால் உங்களை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்கள். இந்தச் சார்பு மனப்பான்மை சரியல்ல. சிலிர்த்து நில்லுங்கள். ‘பிறரை சார்ந்து வாழ்வது’ என்கிற ஊன்றுகோலை உதறி எறியுங்கள்.
உங்களைச் சுற்றி ஊழிக்கால இருள் படர்ந்திருந்தாலும் பரவாயில்லை; உங்கள் உள்ளத்தில் மட்டும் நம்பிக்கையின் சிறு ஒளி கீற்றாக இருந்தால் போதும். நீங்கள் என்றாவது ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீருவீர்கள். சக்தி நிலையில் தன்னம்பிக்கையும், முக்தி நிலையில் கடவுள் நம்பிக்கையும் கைகொடுக்கும் என்கிற சின்ன சூட்சமத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம் இல்லை.
இறைவனை வேண்டும்போது பிரச்னைகள் வராமல் காப்பாற்று என்று வேண்டாதீர்கள். பிரச்னைகளைச் சந்திக்கும் பலத்தையும், ஜெயிக்கும் அறிவையும் அடையாளம் காட்டும்படி வேண்டுங்கள்.
நம்பிக்கைகள் முழுமையாக இருக்க வேண்டும். அரைகுறை நம்பிக்கைகள் ஆபத்தானவை. கடவுள் நம்பிக்கைகூட பலருக்கு அரைகுறைதான்.
தன்னம்பிக்கை தாரம் மாதிரி. கடவுள் நம்பிக்கை தாய் மாதிரி. இரண்டோடுமிருப்பதுதான் சரியான வாழ்க்கை. தன்னம்பிக்கை ஆணவமாகி கடவுள் எதிர்ப்பு என்ற பிதற்றலாக மாறுகிறபோது தாரத்துக்காகத் தாயைக் கொல்கிற பாதகர்களாக நாம் மாறுகிறோம். நாம் செய்ய வேண்டிய வேலைகளைக்கூட செய்யாமல் சோம்பிக் கிடப்பது கட்டிய மனைவியைக் கட்டிலில் பட்டினி போடும் பேடித்தனம். எனவே தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்கிற இரண்டும் அவசியம்.
வாழ்க்கை விசித்திரமானது. நீங்கள் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கு ஏற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. உங்கள் கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள் ரெடிமேட் ஆக உலகத்தில் கிடைக்காது. கேள்வியும், பதிலும் இங்கு மாறிக்கொண்டே இருக்கும். பெருவாரியான தன்னம்பிக்கைப் புத்தகங்கள், வாழ்க்கைக்கான கேள்வி – பதில் தயாரிக்கும் நோட்ஸ்களாகவே இருக்கின்றன.