குழந்தைகளிடம் அன்பு காட்டுவதன் மூலம்தான் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அவர்களை அலட்சியப்படுத்தவோ, காயப்படுத்தவோ செய்யாதீர்கள். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக அதுவே ஒரு காரணமாகிவிடும். குழந்தைகளை ஒருபோதும் அடுத்தவர் முன்பு திட்டவோ, அடிக்கவோ கூடாது. அது அவர்களுக்கு ஆறாத வலியைத் தந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மையில் கொண்டு போய் விடும்.
குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இது குழந்தைகளுக்கு நல்ல ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுப்பதாக அமையும். குழந்தைகள் என்ன பேசினாலும் அதை அலட்சியப்படுத்தாமல், அதன் வார்த்தைகளை காது கொடுத்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேட்பது முக்கியம்.
குழந்தைகள் செய்யும் சிறு சிறு நல்ல செயல்களைப் பாராட்டியும், தவறு செய்திருந்தால் அடுத்தவர்கள் இல்லாத சமயம் தனியாகக் கூப்பிட்டு அன்பாக எடுத்துக் கூறி திருத்தலாம். குழந்தைகளின் நல்ல செயல்களுக்குப் பாராட்டாமல், எப்போதும் அவர்களின் தவறுகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கக் கூடாது. முக்கியமாக, மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யவே கூடாது. முதல் ரேங்க், மார்க் வாங்கவில்லை என்று திட்டுவதோ, அடிப்பதோ செய்யக்கூடாது. இதனால் கல்வியின் மீது குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், எரிச்சல்தான் வரும்.
இதற்கு பதில் உங்கள் குழந்தை எதில் தனித்துவம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து, அதைக் கண்டறிந்து அதில் ஊக்குவியுங்கள். எப்போதும் குழந்தைகளிடம் நீங்கள் கொடுக்கும் உறுதிமொழியை தவறாது நிறைவேற்றுங்கள். ‘ஒழுங்காகச் சாப்பிட்டால் கடைக்குக் கூட்டிப் போகிறேன். அமைதியாக இருந்தால் சாக்லேட் வாங்கித் தருகிறேன்’ என எதைச் சொன்னாலும் அதனை நிறைவேற்றுங்கள். உங்கள் உறுதிமொழியால் குழந்தைகளும் உங்களின் மீது நம்பிக்கை ஏற்படும்.