கொசு கடியில் இருந்து தப்பிக்க நிபுணர்கள் சொல்லும் உபாயம் இதோ!

கொசு கடியில் இருந்து தப்பிக்க நிபுணர்கள் சொல்லும்  உபாயம் இதோ!
Published on

மழைக்காலம் இன்னும் இங்கு ஜரூராகத் தொடங்கவில்லை. தீவிர மழைக்காலம் வருவதற்குள் இந்தக் கொசுக்கள், மனிதப் பிறவிகளை ஒருவழியாக்கியே தீருவோம் என படையெடுக்கத் தொடங்கியுள்ளதை உங்களால் உணர முடிகிறதா?. இரவானால் முன்பைக் காட்டிலும் இப்போது கொசுக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை உணர்கிறீர்களா?!

கொசுக்கள் படையெடுக்கும் அத்தனை காலகட்டங்களிலும் நமது தூக்கத்துக்கு சுத்தமாக கியாரண்டி இல்லை.

இந்தக் கொசுக்களை எப்படியாவது விரட்டியே தீருவது என கொசு விரட்டித் தைலங்கள், கொசுவலைகள்,கொசுக்களை ஒழிக்கும் வேப்போரைஸர்கள், கொசு மாத்திரைகள் என நாம் பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால், அவற்றினால் சிறந்த பயனேதும் உண்டா என்றால் “நிச்சயமாக இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதில்.

இந்த மழைக்காலத்திலும், அதன் பின்னான குளிரான தட்பவெப்பத்திலும் கொசுத்தொல்லையிலிருந்து நமது தூக்கம் மற்றும் ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவக் கூடிய சிறந்த கொசுவிரட்டிகள் எவை என்பதைப் பற்றி அமெரிக்க பல்கலைக்கழக நிபுணரான இம்மோ ஏ. ஹேன்சன் சிறந்த பரிந்துரை ஒன்றை வழங்கி உள்ளார். நியூ மெக்சிகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உயிரியலின் இணைப் பேராசிரியராகவும், ஹெய்லி ஏ. லூக்கர் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவராகவும் விளங்கும் ஹேன்சன் வழங்கும் பரிந்துரையைப் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோமா?

கொசுக்கள் கடிப்பதால் நமது தோலில் அரிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா, போன்ற ஆபத்தான நோய்களும் கூட நம்மைத் தாக்கும் அபாயம் உண்டாகி விடுகிறது. எனவே நிபுணர் பரிந்துரையின் அடிப்படையில் கீழக்கண்ட ரசாயணங்கள் கலந்த தரமான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தி கொசுக்கடி உபத்திரவங்களில் இருந்து தப்புவோமாகா!

DEET

கொசுக்களுக்கு எதிராக DEET மிகத்தீவிரமாக வேலை செய்கிறது. N,N-Diethyl-meta-toluamide அதாவது dithyltoluamide அல்லது DEET எனும் ரசாயனம் கொசு மட்டுமல்ல அனைத்து விதமான பூச்சி விரட்டிகளின் செய்முறைகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய பொதுவனதொரு மூலப்பொருளாகும். மென்மையான மஞ்சள் நிற திரவமான இதை நேரடியாக சருமத்திலோ அல்லது ஆடைகளிலோ பயன்படுத்தலாம். கொசுக்கள், ஈக்கள், உண்ணிகள் உட்பட அனைத்து விதமான கடிக்கும் பூச்சிகளுக்கு எதிரான பாதுகாப்பை இது வழங்குகிறது.

1950 களில் அமெரிக்க இராணுவத்தால் உருவாக்கப்பட்ட இந்த DEET சிறந்த பூச்சிக் கொல்லியாக ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அத்துடன் கொசு விரட்டி தயாரிப்புகளிலும் நன்கு நிறுவப்பட்ட இடத்தை தக்க வைத்திருப்பது இதன் சிறப்பு எனலாம். கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை பாதுகாப்பு தரக்கூடியது இது என்கிறார்கள் நிபுணர்கள்.

பிக்காரிடின் (Picaridin)

பிக்காரிடின் ரசாயனமும் கொசுக்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. இந்த செயற்கை கொசு விரட்டி 20% செறிவில் ஆறு மணி நேரம் வரை கொசுக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். இது DEET க்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாகக் கூட கருதப்படுகிறது.

எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய்

அல்லது OLE ஆயில் கூட கொசுக்களுக்கு எதிராக நன்றாகவே வேலை செய்கிறது. அதன் கொசு விரட்டும் திறன் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும்.

மற்ற அத்தியாவசிய எண்ணெய்களில்;

கிராம்பு எண்ணெய் கொசுக்கடியில் இருந்து நம்மைக் காக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும், மூலப்பொருளான யூஜெனால், கொசு விரட்டி லோஷனில் 10% அளவுக்குப் பயன்படுத்தப்பட்டு 90 நிமிடங்களுக்கு மேல் கொசுக் கடியிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை எண்ணெய் வேலை செய்கிறது. இந்த எண்ணெய், செயலில் உள்ள பொருட்களான சின்னமால்டிஹைட் மற்றும் யூஜெனால், கொசு விரட்டி லோஷனில் 10% அளவுக்குப் பயன்படுத்தப்பட்டு 60 நிமிடங்களுக்கு மேல் கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

ஜெரானியோல் மற்றும் 2-பிஇபி, அல்லது 2-ஃபைனைல்தில் ப்ரோபியோனேட், கொசு விரட்டி லோஷனில் 10% அளவுக்குப் பயன்படுத்தப்படுகையில் சுமார் 60 நிமிடங்கள் வரை திறன் வாய்ந்த கொசு விரட்டியாக வேலை செய்கின்றன.

சிட்ரோனெல்லா எண்ணெயும் கூட கொசு விரட்டியாகச் சற்றுப் பயன்படுகிறது என்ற போதும் அதன் திறன், அவ்வளவு சிறப்பாக இல்லை. கொசு விரட்டி லோஷன் அல்லது தைலத்தில் சிட்ரோனெல்லா எண்ணெய் 10% கலக்கப்படும் போது சுமார் 30 நிமிடங்களுக்கு மட்டுமே கொசுக் கடியிலிருந்து பாதுகாக்க நமக்கு உதவுகிறது.

கொசுக்களை விரட்ட எவையெல்லாம் உதவாது!

மேற்கண்ட ரசாயனங்கள் கலந்த கொசு விரட்டிகள் தவிர்த்து தற்போது மார்கெட்டில் கொசு விரட்டி பேண்டுகள்(Mosquito repellent bracelet bands), அல்ட்ரா சோனிக் கதிர்கள் மூலம் கொசுக்களை விரட்டும் நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் போன்றவையெல்லாம் கூட நம்பகமான கொசு விரட்டிகள் என அறிமுகப்படுத்தப் பட்டு குவிந்து கிடக்கின்றன. இவை தவிர வைட்டமின் பி சப்ளிமெண்டரி உணவு வகைகள் மற்றும் பூண்டு கூட கொசுக்களை விரட்டும் சக்தி கொண்டதாக சிலர் கதை கட்டுகிறார்கள். ஆனால், இவை வேலை செய்யாது என்பதே நிஜம்.

இந்த சப்ளிமெண்ட்ஸ் கொசுக் கடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதாக எந்த அறிவியல் ஆதாரமும் இதுவரை காட்டப்படவில்லை. எனவே, அவற்றால் ஒரு பயனும் கிடையாது. அத்துடன், ஒளி அடிப்படையிலான கொசு விரட்டிகளும் கூட வேலைக்கு ஆகாது. இந்த சாதனங்கள் வண்ண ஒளி விளக்குகளாக வருகின்றன, ஆயினும், அவை வெள்ளை ஒளியை நோக்கி பறக்கும் பூச்சிகளை ஈர்ப்பதில்லை. இந்த அணுகுமுறை அந்துப்பூச்சிகள், வண்டுகளை ஒழிப்பதில்கொஞ்சம் உதவக் கூடியவை என்றபோதும் கொசுக்களை விரட்ட அவை உதவுவது இல்லை. எனவே, இவற்றை எல்லாம் வாங்கினீர்கள் எனில் வீட்டில் கிடக்கும் உபயோகமற்ற எண்ணற்ற குப்பைகளுடன் குப்பையாகச் சேர்க்க வேண்டியது தான் என்கிறார்கள் இது குறித்து ஆராயும் நிபுணர் குழுவினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com