அக்டோபர் 16ஆம் தேதி அன்று அமெரிக்காவில் தேசிய மேலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது நிறுவனத்தின் மேலாளர் என்னதான் திறமை வாய்ந்தவராகவும் அறிவில் சிறந்தவராகவும் இருந்தாலும், அவருக்கென்று சில விசேஷ குணங்கள் இருந்தால் தான் தன் பணியை சிறப்புடன் செய்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். ஒரு நல்ல மேலாளருக்கு தேவையான குணாதிசயங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
1. தன் வேலையை நேசிக்கும் பாங்கு:
ஒரு மேலதிகாரி தன்னுடைய வேலையை நேசித்து, விரும்பிச் செய்தால் பணியாளர்களும் தங்களுடைய வேலையை விரும்பி செய்வார்கள்; வேலை பார்க்கும் சூழ்நிலையும் மிகவும் இணக்கமாக இருக்கும்
2. ஊழியர்களை மரியாதையாக நடத்துதல்:
தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களை, அவர் கடைநிலை ஊழியராக இருந்தாலும் மரியாதையோடு ஒரு மேலாளர் நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆர்வத்துடன் பணியாற்றுவர்.
3. நிதானமான மனநிலையை கொண்டிருத்தல்:
மேலதிகாரி நிதானமான பொறுமையான மனநிலையை கொண்டு இருந்தால் மட்டுமே பணியாளர்கள் தங்களுடைய பிரச்சனையை அவரிடம் தைரியமாக சொல்வார்கள். அலுவலகத்தில் ஏதேனும் குழப்பங்களும் சச்சரவுகளும் ஏற்பட்டால் அதை எளிதாக கையாளும் திறனும் அவருக்கு வரும்.
4. திறந்த மனத்துடன் இருத்தல்:
பணியாளர்கள் சொல்லும் ஆலோசனைகளை திறந்த மனதுடன் கேட்டு தகுதியானவைகளாக இருப்பின் அவற்றை பயன்படுத்திக் கொள்வார். சொல்வது யார் என்று பார்க்காமல் அவர் சொல்லும் ஆலோசனை சரியாக இருக்கிறதா என்பதை மட்டுமே அவர் பார்ப்பது நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
5. பணிவு:
இது ஒரு மேலாளருக்கு மிக அவசியமான குணமாகும். பணிவுடன் இருக்கும் ஒரு மேலாளர் தன்னுடைய குறைகளை, பிழைகளை ஒத்துக் கொண்டு அவற்றை சரி செய்ய முயல்வார்.
6. முடிவெடுக்கும் பாங்கு:
சரியான முடிவு எடுக்கும் திறமை ஒரு மேலாளருக்கு மிக அவசியமான குணமாகும். ஒரு அசந்தர்ப்பமான, குழப்பமான சூழ்நிலையில் கூட சரியான முடிவெடுக்கும் திறன் அவருக்கு வேண்டும்.
7. நேர்மையான குணம்:
மேலதிகாரி மிகவும் நேர்மையாக இருந்தால் மட்டுமே அவருக்கு கீழ் பணிபுரிபவர்களும் நேர்மையாக இருப்பார்கள். தவறு செய்ய அஞ்சுவார்கள்.
8. பணியாளர்களை ஊக்குவித்தல்:
தன் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் ஊக்குவிப்பது மேல் அதிகாரியின் கடமை. இது அவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்வதற்கு துணையாக இருக்கும்.
9. பாராட்டுதல்:
பணியாளர்களை திறந்த மனதுடன் பாராட்டுவது மிகவும் அவசியம். வாய் வார்த்தையாகவும் சில சமயங்களில் சிறப்பு பரிசுகள் கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் பாராட்ட வேண்டும். இது அவர்களை உற்சாகமாக வேலை செய்யு வைக்கும்.
10. பணியாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருப்பது:
எல்லாப்பணியாளர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.எதில் அவர்கள் திறன் குறைந்திருக்கிறார்களோ அதை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
11. அக்கறை:
ஊழியர்களின் எதிர்காலம் மற்றும் தொழில் குறித்து நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள் என்பதை ஊழியர்களுக்கு தெரியப்படுத்துங்கள் பணியாளர்களின் குறைகளை, கஷ்டங்களை காது கொடுத்து கேட்க வேண்டும்.
12. குழுவுடன் இணைந்து பணியாற்றுதல்:
அவர்களுக்கு கட்டளையிட்டு விட்டு மட்டும் ஒதுங்காமல் அவர்களுடன் ஒன்றாக வேலை செய்யும் போது தான், அந்தப் பணி சிறப்பாகவும், சீக்கிரமாகவும் முடியும்.