வயதான தோற்றத்தை தாமதப்படுத்த என்ன செய்யலாம்?

வயதான தோற்றத்தை தாமதப்படுத்த என்ன செய்யலாம்?
Published on

ம்பது வயதான ஒருவரைப் பார்த்து, ‘நீங்க பார்க்க ரொம்ப யங்கா இருக்கீங்க. காலேஜில படிக்கிற பையனுக்கு அப்பான்னு சொன்னா நம்பவே முடியலை. நீங்க அவனுக்கு அண்ணன் மாதிரிதான் தெரியறீங்க’ என்று சொன்னால் அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்? சும்மா ஜிவ்வுன்னு வானத்தில பறக்கிற பீல் வருமே? அதேபோல நாற்பது வயதுள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பத்து வயதுச் சிறுவன், ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதற்குப் பதிலாக, ‘அக்கா’ என்று அழைத்தால், நிஜமாகவே அந்தப் பெண்ணுக்கு பத்து வயது குறைந்து விடுமே?

எத்தனை வயசானாலும் பார்க்க இளமையாகத் தெரியத்தான் எல்லோருமே ஆசைப்படுவார்கள். ஆனாலும், ‘முப்பத்தைந்து வயதைத் தாண்டினாலே மெல்ல நரை முடி எட்டிப்பார்க்க ஆரம்பிக்கிறதே? அதைக் கூட மருதாணியும் அவுரியும் போட்டு இயற்கைக் கலருக்குக் கொண்டு வந்திடலாம். ஆனால், நாற்பதில் தோன்ற ஆரம்பிக்கும் முகச் சுருக்கம், கண்கள் ஓரத்தில் கருவளையம், சிரிக்கும்போது வாயோரத்தில் விழும் கோடுகள், கைகளில் தோன்றும் சுருக்கங்கள் எல்லாம் நம் வயதைக் காட்டிக் கொடுக்குதே. எத்தனை ஆயிரம் கொடுத்து பேஷியல் செய்தும் என்ன பயன்?’ என்று வருத்தம் வரத்தான் செய்யும்.

வயதாகும்போது ஏன் உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன என்று தெரியுமா? நமது உடலில் இயற்கையாகவே சுரக்கக்கூடிய ஒரு வகைப் புரதத்தின் பெயர் கொலாஜன். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நமது சரும எடையில் 75 சதவீதத்தை ஆக்கிரமித்து இளமையும் சருமத்துக்கு நெகிழ்ச்சித் தன்மையும், மென்மையும் இது அளிக்கிறது. அதனால்தான் குழந்தைகளின் சருமம் பட்டுப் போல மிருதுவாக இருக்கிறது. ஆனால், வயதாக வயதாக உடலில் கொலாஜன் சுரப்பு குறைந்து எலும்புகள், தசை நார்கள், திசுக்களுக்குத் தேவையான கொலாஜன் அளவு குறையும்போது நமது சருமம் சுருக்கங்களுடன் வயதான தோற்றத்தையும் பெறுகிறது.

சிலர் வயதான தோற்றத்தை மறைக்க கொலாஜன் சப்ளிமென்ட் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் உடலுக்கு பக்கவிளைவுகள் தோன்றும். ஆனால், இயற்கையின் கொடையான சீதாப்பழம் நம் சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவுகிறது. சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் கொலாஜனின் முறிவை மெதுவாக்கி, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கிறது.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் சுருக்கங்கள், முதுமையை, மூப்பு சம்பந்தமான அறிகுறிகள் தாமதமாவதை உறுதி செய்கிறது. மேலும், சரும செல்கள் மீளுருவாக்கம் செய்வதற்கும் இது உதவுகிறது. அடிக்கடி சீதாப்பழம் சாப்பிடுபவர்களின் சருமம் எப்போதும் இளமையாக இருக்கிறது. மேலும், இது நீரிழிவு நோயையும் தடுக்கிறது. இதிலுள்ள ஒமேகா 3 மனநிலை மாற்றங்களை சீர்படுத்துகிறது. சோர்வை நீக்கி, சுறுசுறுப்பை வழங்குவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்கின்றது. குடலின் செயல்பாட்டை மேம்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும், கண்பார்வை மேம்பாடு மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலுக்கு சக்தியையும் அளிக்கிறது. இத்தனை நன்மைகளைத் தரும் சீதாப்பழத்தை அடிக்கடி உண்டு பயன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com