இன்று மார்ச் 17 (வெள்ளிக்கிழமை) உலக தூக்க தினம். என்னது? தூக்கத்தைக் கொண்டாட ஒரு நாளா என்று தானே கேட்கிறீர்கள்?
நாம் உண்ணும் உணவைப் போலவே நாம் தூங்கும் தூக்கமும் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. சர்வதேச தூக்க தினம் வருடந்தோறும் மார்ச் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு தூக்கத்தின் அவசியத்தை உணர்த்தவே இந்த தினம் கடைபிடிக்கப் படுவதால் இது ஒரு விழிப்புணர்வு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
யார் யார் ஒரு நாளுக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?
பிறந்த குழந்தைகள் - 14 - 17 மணி நேரம்
4-11 மாத குழந்தைகள் - 12 - 15 மணிநேரம்
1-2 வயது குழந்தைகள் - 11- 14 மணி நேரம்
3-5 வயது வரை - 10 -13 மணி நேரம்
6-13 வயது வரை - 9 -11 மணி நேரம்
14-17 வயது வரை - 8 -10 மணி நேரம்
18-25 வயது வரை - 7 - 9 மணி நேரம்
26 வயதுக்கு மேற்பட்டோர் - 7 - 8 மணி நேரம்
தூக்கம் குறைவதால் உடல் சோர்ந்து விடும். பசி குறையும். அதனால் உண்ணும் உணவின் அளவு குறைய, உடல் எடையும் குறையும். நல்ல தூக்கம் இல்லாதவர்கள் பகலில் மிகுந்த எரிச்சலுடன் இருப்புக் கொள்ளாமல் அல்லல்படுவார்கள்.
தூக்கம் என்பது ஒவ்வொருவருடைய உடல்நலம், மன நிலையைப் பொறுத்தே அமையும். வயதானவர்களுக்கு குறைவான தூக்கமே தேவைப்படும் என்று சொல்கி றார்கள். ஆனால் அது உண்மையல்ல. முதுமைப் பருவத்தில் தூக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டிருக்கும். அதவது முதுமைக் காலத்தில் ஒருவர் பகலில் செய்யும் வேலையைப் பொறுத்து அவருடைய தூக்கம் அமைகிறது. பகலில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு இரவில் ஆழ்ந்த உறக்கம் அமைவது சுலபம். பகலில் எந்த உடல் உழைப்பும் இல்லாமல் சும்மா உட்கார்ந்தே பொழுதைக் கழிப்பவர்களுக்கு இரவில் ஆழ்ந்த உறக்கம் வராது. தூக்க மாத்திரை போடுபவர்கள் உடல்நலக் குறைவு போன்ற அத்தியாவசமான காரணங்களுக்கு மட்டுமே தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் உபயோகப் படுத்த வேண்டும்.
இளைய தலைமுறையினர், "நான் இரவில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவேன். டீவி பார்த்துக் கொண்டே தூங்குவேன். சிறிது நேரம் ஸ்மார்ட் ஃபோன் பார்த்து விட்டு தான் தூங்குவேன்" என்கிறார்கள். ஆனால் உண்மையில் இவையெல்லாம் நிம்மதியான உறக்கத்தை பாதிக்கும். அப்போ இரவு சுகமாக தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
1) மாலையில் உடற்பயிற்சி செய்வதோ, நடைபயிற்சி மேற்கொள்வதோ இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
2) பகலில் தூங்குவதானால் மிகவும் மிதமாக 30 முதல் 40 நிமிடங்கள் வரையே தூங்க வேண்டும்.
3) படுக்கப் போவதற்கு முன் வெந்நீரில் குளித்து விட்டு வெதுவெதுப்பான சூட்டில் பால் அருந்தி விட்டுப் படுத்தால் இதமான தூக்கம் வரும்.
4) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
5) படுத்தவுடன் ஒரு 30 - 40 நிமிடங்களுக்கும் தூக்கம் வரவில்லையேன்றால் வெளியே சென்று சற்று காலாற நடந்து விட்டு வரலாம். அல்லது ஏதாவது புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். அப்போது தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தவுடன் உறங்கச் சென்று விட வேண்டும்.
6) சிறிது நேரம் தியானம் செய்து விட்டு தூங்கச் செல்லலாம். அது அமைதியான தூக்கத்திற்கு நல்ல உத்திரவாதம்.
இவற்றையெல்லாம் கடைபிடித்தால் இரவில் நன்றாக உறங்கி காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து உங்கள் அலுவல்களை கவனிக்கலாம். நல்ல தூக்கம் என்பது நாள் முழுவதுமே நல்ல புத்துணர்ச்சியையும் மகிழ்வான மனநிலையையும் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் பலப்படும்.
இன்று சர்வதேச தூக்க தினமாயிற்றே? சுகமாக தூங்கப் பழகிக் கொள்ளலாமா? தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவட்டும்!