

பொதுவாக 'படிகாரம்' என்றாலே நம் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, சலூன் கடையில் ஷேவிங் செய்த பிறகு முகத்தில் தேய்ப்பார்கள். இன்னொன்று, புது வீடு கட்டும்போது அல்லது கடைகளில் திருஷ்டிக்காகத் தொங்க விட்டிருப்பார்கள். இந்தச் சாதாரண வெள்ளைக் கல்லுக்குள் இருக்கும் வேதியியல் ஜாலங்கள் சமையலறையில் நமக்குப் பல வழிகளில் கைகொடுக்கும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். குறிப்பாக, இதைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் நடக்கும் மாற்றம் ஆச்சரியமானது.
தண்ணீரில் நடக்கும் மேஜிக்!
மழைக்காலம் வந்தாலே கார்பரேஷன் தண்ணியோ, போர் தண்ணியோ கொஞ்சம் கலங்கலாக, சேறு கலந்து வருவது வழக்கம். அந்த மாதிரி நேரங்களில், ஒரு பெரிய பாத்திரத்தில் அந்தத் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு சிறிய துண்டு படிகாரத்தைப் போட்டுப் பாருங்கள். அல்லது, படிகாரத்தை அந்தத் தண்ணீரில் நான்கைந்து முறை சுற்றிக் காட்டுங்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் ஒரு அதிசயம் நடக்கும். தண்ணீரில்கலந்திருந்த மண், தூசி, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என அத்தனையையும் இந்தப் படிகாரம் ஒரு காந்தம் போல ஈர்த்து, பாத்திரத்தின் அடியில் கசடாகப் படிய வைத்துவிடும். மேலே இருக்கும் தண்ணீர், அப்படியே ஸ்படிகம் போலத் தெளிவாக மாறிவிடும். இயற்கையான முறையில் தண்ணீரைச் சுத்திகரிக்க இதைவிடச் சிறந்த வழி வேறில்லை.
மொறுமொறு சிப்ஸ்!
நம்ம வீட்ல உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது நேந்திரம் சிப்ஸ் போட்டால், சிறிது நேரத்திலேயே அது மெத்துமெத்துனு ஆகிவிடும். ஆனா, பேக்கரியில் வாங்குவது மட்டும் எப்படி கடைசி வரைக்கும் மொறுமொறுப்பாவே இருக்கு? அங்கதான் இந்தப் படிகாரம் வேலை செய்யுது. உருளைக்கிழங்கை நறுக்கிய பிறகு, சிறிது படிகாரம் கலந்த நீரில் அதை ஒரு 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு எடுத்து உலர்த்திப் பொரித்துப் பாருங்கள். சிப்ஸ் அவ்வளவு சீக்கிரம் நமத்துப் போகாது, கரகரப்பாகவே இருக்கும்.
கெட்ட வாடைக்கு குட்-பை!
மீன், இறால் சமைத்தாலோ அல்லது பூண்டு, வெங்காயம் உரித்தாலோ, சோப்பு போட்டு எவ்வளவு கழுவினாலும் கையில் அந்த நெடி போகவே போகாது. இதற்குப் படிகாரம் ஒரு சூப்பர் தீர்வு. கையில் படிகாரத்தைக் கொண்டு லேசாகத் தேய்த்துக் கழுவினால், எப்பேர்ப்பட்ட துர்நாற்றமும் நொடியில் மறைந்துவிடும்.
வெறும் திருஷ்டி சுற்றுவதற்கு மட்டும் பயன்படும் என்று நாம் நினைத்த படிகாரம், நம் ஆரோக்கியத்திற்கும், சமையலின் ருசிக்கும் எவ்வளவு உதவுகிறது. விலை மிகவும் மலிவாகக் கிடைக்கும் இந்தப் படிகாரத்தை, இனிமேல் உங்கள் சமையலறை அஞ்சறைப் பெட்டிக்கு அருகிலும் ஒரு சிறிய டப்பாவில் வாங்கி வையுங்கள். அவசரத்திற்கு இது நிச்சயம் உதவும்.