
மும்பையில் தற்சமயம், பர-பரப்பாக பேசப்படும் லிவிங் வில் (வாழும் உயில்), என்பது ஒரு சட்ட ஆவணம்.
ஒருவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டு, முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கும்போது, அவருக்கு எந்த சிகிச்சைகள் தொடர வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்பதைக் கூறும் அறிக்கையே 'லிவிங் வில்' ஆகும். 'லிவிங் வில்லை' எழுதுகின்ற நோய்வாய்ப்பட்டவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிகவும் நெருங்கிய நம்பகமானவர்களிடம் இது குறித்து தெரிவிப்பது அவசியம். அவர்களின் சம்மதமும் தேவைப்படும்.
இதன் முக்கியத்துவம்?
இன்றைய மருத்துவ நுட்பங்கள் உயிரைப் பராமரிக்க முடியும். ஆனால், அது குணப்படுத்துகிறதா? அல்லது உயிர் நீட்டிக்கிறதா ? என்பதை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இது நோயாளிக்கும் குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் மற்றும் அதிக மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்க்க 'லிவிங் வில்' உபயோகப்படும்.
யார் எழுதலாம்?
லிவிங் வில்லை, வயது வித்தியாசமின்றி, அனைவரும் எழுதலாம். ஆனால், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர நோய்களுடன் வாழ்பவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும்.
வழக்கமான வில்லுக்கும், லிவிங் வில்லுக்கும் உள்ள வித்தியாசம்?
வழக்கமாக எழுதப்படும் ‘வில்’ மரணத்திற்குப் பிறகு, சொத்துகள் எப்படி பகிரப்படும் என்பதைக் கூறும். ஆனால், ‘லிவிங் வில்’ என்பது ஒருவரது உயிர்நிலை சிக்கலான போது, மருத்துவ முடிவுகளை பற்றியது.
லிவிங் வில்லை மாற்ற முடியுமா? அல்லது ரத்து செய்ய முடியுமா..?
புதிய ‘லிவிங் வில்’ ஒன்றை உருவாக்குவதன் மூலம் பழையதை ரத்து செய்யலாம். இதற்கான சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முக்கிய தேதி:
இந்திய உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 16, 2025க்குள் 'லிவிங் வில்' பதிவு செய்யும் இணையதளத்தை தொடங்க மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வெப் போர்ட்டலை, மும்பை மாகிமிலுள்ள P.D Hinduja Hospital and Research Centre வரவேற்கத் தயாராக இருக்கிறது. மருத்துவர்களும் உதவ தயாராக உள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி, மரியாதைக்குரிய திரு தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் அமைப்பு அமர்வு, மூன்று ஒத்த கருத்துக்களில், வாழ்க்கை, மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையில், சிகிச்சையை நிராகரித்து, கண்ணியத்துடன் இறக்கும் உரிமையும் அடங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
உபரி தகவல்கள் :
கேரளாவில் இதுவரை 30 பேர்கள் 'லிவிங் வில்' எழுதியுள்ளனர்.
'லிவிங் வில்லை' நடைமுறைப்படுத்த, நம்பகமான நபர்கள் தேவைப்படும்.
'லிவிங் வில்' எழுதுவதில் நன்மை உள்ளது எனினும், அதை சரியாக செயல்படுத்தவில்லையெனில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நன்மை பயக்குமெனில், புதிய முயற்சியாகிய 'லிவிங் வில்லை' வரவேற்கலாம்.