இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் வறுமை ஒழிப்பு என்பது சவாலான விஷயம். இதற்கு பல நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் ஒரு சிக்கலான விஷயமாகும். ஆனாலும், தனி நபர்கள் பல்வேறு வழிகளில் வறுமையை ஒழிப்பதில் பங்களிக்க முடியும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தன்னார்வத் தொண்டு மற்றும் கற்பித்தல்: வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு மற்றும் பெரியவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி அறிவை வழங்கலாம். அல்லது அவர்கள் பள்ளி சென்று கல்வி கற்க தேவையான பல உதவிகளை செய்யலாம்.
ஆதரவுத் திறன் மேம்பாடு: வேலையில்லாதவர்களுக்கான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் அல்லது தன்னார்வ தொண்டு செய்து அதன் மூலம் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம்.
குறுநிதி மற்றும் தொழில் முனைவு: சிறு வணிகங்களை ஆதரிக்க வேண்டும். உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொடக்கங்களில் முதலீடு செய்து அவற்றை ஆதரிக்க வேண்டும். சாத்தியமாக இருந்தால் சிறு வணிகங்களை தொடங்க இல்லாதவர்களுக்கு கடனாக பணம் தந்து உதவலாம். மைக்ரோ லோன்களை வழங்கலாம்.
சமூக மேம்பாடு: உள்ளூரில் இருக்கும் என்.ஜி.ஓக்கள் எனப்படும் அரசு சாரா நிறுவனங்களுடன் சேர்ந்து வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பங்கெடுக்கலாம், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி இவற்றில் கவனம் செலுத்தும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபடலாம்.
சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு: வறுமை தொடர்பான பிரச்னைகளை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் சமூகத் தளங்களை பயன்படுத்தலாம். சிறந்த தொழிலாளர் சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு வலைகள் மற்றும் கல்விக்கான உதவித்தொகை வாங்க ஏற்பாடு செய்தல். கல்விக்கொடை வழங்கும் நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் உதவிகளை தேவையான மாணவ, மாணவியர் பெற வழிவகை செய்யலாம். இவை பற்றிய பரப்பரை செய்வது வறுமையில் வாடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்: உற்பத்தித் திறனை மேம்படுத்தி உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய நிலையான விவசாய முறைகளை சிறு விவசாயிகள் பின்பற்ற உதவ வேண்டும். அவர்களிடமிருந்து காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அவர்களைப் பற்றி சிபாரிசு செய்யலாம். அதே சமயத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தும் திட்டங்களை ஆதரிக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட மனிதர்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார முகாம்களை அமைப்பதில் பங்கெடுக்கலாம். ஊட்டச்சத்து கல்வி மற்றும் உணவு பாதுகாப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை எடுக்கலாம்.
நன்கொடைகள்: வறுமையைப் போக்க நேரடியாக தொண்டு செய்யும் புகழ் பெற்ற நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். ஏழ்மையான நிலையில் உள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி உதவி செய்யலாம்.
ஆய்வு மற்றும் தீர்வு: வறுமை ஒழிப்பு உத்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கேற்கலாம். ஏழை மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தக்கூடிய புதுமையான தீர்வுகளை உருவாக்கலாம் அல்லது ஆதரிக்கலாம்.
நெட்வொர்க் மற்றும் கூட்டுப் பணி: வறுமையை கூட்டாக நிவர்த்தி செய்ய பிற தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பு செய்ய வேண்டும். உள்ளூர் சமூகங்கள் ஏழை மக்களின் நலன் தொடர்பான முடிவு எடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்கலாம். பிறரையும் பங்கேற்க ஊக்குவிக்கலாம்.
வறுமையை ஒழிப்பது கடினமான பணி என்றாலும் தனிப்பட்ட முயற்சிகள் பரந்த மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். ஒவ்வொரு சிறிய செயலும் நன்மை அளிக்கும். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.