முதியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது எது?

முதியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது எது?

முதியவர்களை மதிப்பவர்கள் தங்கள் வெற்றிக்கான பாதையை வழி வகுத்துக் கொள்கிறார்கள்” என்கிறது ஆப்ரிக்க நாட்டுப் பழமொழி. “வீட்டிலிருக்கும் முதியவர் வாழும் பொன் புதையல் போன்றவர்” என்று போற்றுகிறது சீனப் பழமொழி. கூட்டுக் குடும்பத்தை ஆதரிக்கும் இந்திய கலாசாரத்தில் வீட்டுப் பெரியவர்களுக்கு எப்போதுமே பெரும் மதிப்பு உண்டு.

வாழ்க்கையில் தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே முடித்து முதுமை என்ற ஒய்வில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பது என்ன?  சிக்கலில்லாத வாழ்க்கை, அன்பு காட்டும் சொந்தங்கள், மருத்துவம், இன் சொல், மரியாதை, ஆரோக்கியமான உடல் நிலை, பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவை மட்டுமே.

தற்போதைய முதிய தலைமுறையினர், இதற்கு முன்னாலிருந்த தலைமுறையினர்களை விடவும் உலகில் பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றனர். எல்லாத் துறைகளிலும் கடந்த எழுபது ஆண்டுகளில் உலகம் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

கூகுளில் தானே விடை தேடியோ, “அலெக்ஸா” என்று கூப்பிட்டு அதனை விடை தேடச் சொல்லியோ, தற்போதய இளைய தலைமுறையினர் தங்களுடைய சந்தேகங்களுக்கு விடை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போதுள்ள முதியவர் கூட்டம் தனக்கு விடை தெரியாத கேள்விகளுக்கு நூலகத்திலும், பழைய புத்தகக் கடைகளிலும் பதிலைத் தேடி அறிவை வளர்த்துக் கொண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இளம் தலைமுறையினர் சிலர் “அப்பா, அம்மாவிற்கு வலைதளம் உபயோகிக்கத் தெரிவதில்லை. வாட்ஸ் அப் செய்திகள் அனுப்பத் தெரிவதில்லை” என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னுடைய பதில் “அவர்களுக்கு விளங்கும் வண்ணம் உங்களுக்கு சொல்லித் தரத் தெரிவதில்லை” என்பதுதான்.

தனிமையில் வாழும் முதியவர்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் தற்போது ஒரு கேள்விக் குறி. 2021ஆம் ஆண்டு முதியவர்கள் கொலை செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதில் பலவற்றில், முதியவர்களுக்கு நன்கு அறிமுகமாகி, அவர்களிடம் வேலைக்கு இருந்தவர்கள் பணத்தாசையால் அவர்களை கொலை செய்திருப்பது தெரிகிறது. வலைதள மோசடியிலும் முதியவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். காவல் துறை துணையுடன் அரசு தனிமையில் இருக்கும் முதியவர்கள் பாதுகாப்பிற்கு வழி செய்ய வேண்டும்.

“இரை தேடி பறவை கூட்டை விட்டுச் செல்வது” போன்றதுதான் மகன், மகள் திரவியம் தேடி அயல்நாடு  செல்வது. இது தவிர்க்க முடியாதது. “நாமிருவர், நமக்கொருவர்” என்று ஆகிவிட்ட இந்த கால கட்டத்தில் மகனோ, மகளோ அயல்நாடு செல்ல, பெற்றோர் தனிமைப் படுத்தப்படுகின்றனர்.

பெற்றோர்கள் பாதுகாப்பிற்கும், மருத்துவ தேவைக்கும் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வழிவகைகளை செய்ய வேண்டியது குழந்தைகள் கடமை. அவர்கள் தனியாக இருந்தால் போதுமான பாதுகாப்பும், மருத்துவ உதவியும் கிடைக்காது என்று தோன்றினால் சகல வசதிகள் நிறைந்த முதியோர் இல்லத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும். சொந்த வீடு இருக்கும் போது, முதியோர் இல்லத்தில் தங்குவது கேவலம் என்று நினைக்காமல், இக்கால வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது என்று உணர்ந்து முதியவர்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லத்தில் சேர்ந்தவுடன் கடமை முடிவடைவதில்லை. அடிக்கடி கூப்பிட்டு நலன் விசாரிப்பது, ஒளிக்காட்சியில் குடும்பத்துடன் தாய் தந்தையர்களுடன் பேசுவது, மருத்துவர்களிடம் பெற்றோர் உடல்நிலை பற்றிக் கேட்டறிவது ஆகியவற்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தன்னுடைய வசதிக்காகவும், சுக வாழ்விற்காகவும், மகன் என்னை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டான் என்று முதியவர்கள் வருந்தும் நிலைக்கு அவர்களைத் தள்ளக் கூடாது.

தன்னுடைய பெற்றோர்களுடன் இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்ல வேண்டும். உங்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், சிறிது நேரமாவது அவர்களுடன் அமர்ந்து அளவளாவ வேண்டும். அவர்களுக்கு பிடித்தவற்றை அவர்களுடன் விவாதிப்பது முதியவர்களுக்கு நல்ல மன நிறைவைத் தரும். புத்தகங்கள், சினிமா, அரசியல், கிரிக்கெட் என்று அவர்களுக்கு விருப்பம் இருக்கும் பொருள் பற்றிப் பேசுங்கள்.

குடும்பத்தில் நீங்கள் எடுக்கும் முடிவைக் கூட, பெரியவர்களுடன் பேசி அவர்களுக்கு சந்தோஷத்தை அளியுங்கள். “எழுபதைக் கடந்த தாய், தந்தையர் சேலை, வேஷ்டி ஆகியவற்றைத் தவிர்த்து, நைட்டி, நைட்பேண்ட் ஆகியவற்றிற்கு மாறுவது நல்லது என்று புரிய வையுங்கள்.” சேலை, வேஷ்டி தடுத்து கீழே விழும் நிலை ஏற்படாமல் இந்த மாற்றம் தடுக்கும். சத்தான காய்கறிகள், பழவகைகள் நல்ல ஆரோக்கியத்தைத் தரும். மனதிற்குப் பிடித்ததைச் செய்ய ஊக்கமளியுங்கள் – படிப்பது, எழுதுவது, பெயிண்டிங்க், சுடோகு போடுவது என்று அவர்களுக்கு பிடித்ததில் கவனம் செலுத்தும் போது வாழ்க்கை சிறக்கும்.

நூறு வயதைக் கடந்தவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களை  ‘நீல மண்டலங்கள்’ என்பர். உலகின் ஐந்து ‘நீல மண்டலங்கள்’ இவை: ஓகினாவா - ஜப்பான், சார்டினியா - இத்தாலி, லோமாலிண்டா - கலிபோர்னியா, நிகோபா தீபகற்பம் – கோஸ்டாரிகா மற்றும் இகாரியா, கிரீஸ். இவர்களின் நீண்ட ஆயுள் இரகசியம் சுறுசுறுப்பான வாழ்க்கை, வயிற்றை எண்பது சதவிகிதம் மட்டும் நிரப்பிக் கொள்ளுதல்.

“முதுமை சாபமல்ல. ஓய்வெடுக்க இறைவன் கொடுத்த வரம்” என்ற மனநிலைக்கு பெற்றோர்கள் மனதை மாற்றுவது” இளைய தலைமுறையின் கடமை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com