எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது!

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது!
Published on

மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம். எப்படி மனிதனுக்கு தூக்கம் அவசியமோ, அதேபோல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அதே போல் தூங்கும் திசையையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

ஒரு மனிதனுக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். இதனால் எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடிவதோடு, மூளையின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். தற்போதைய காலத்தில் மூளைக்கு அதிகளவு வேலை கொடுக்க வேண்டியிருப்பதால், மன அழுத்தம் மற்றும் டென்சன் மனிதர்களை வதைக்கிறது. இதற்கு ஒரே தீர்வு நிம்மதியான தூக்கம் தான்.

இக்கட்டுரையில் ஒருவர் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன விளைவு ஏற்படும் என்றும், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்றும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு திசை

வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கருதப்படுகிறது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு, உடல் நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் மோசமாவதோடு, செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என நம்பப்படுகிறது. முக்கியமாக பிணங்களை வடக்கு திசையில் தலை வைத்துதான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.

ஏன் வடக்கு கூடாது?

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தெற்கு திசை

இந்த திசை மிகச்சிறப்பான திசையாக கருதப்படுகிறது. ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

கிழக்கு திசை

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு சிறந்த திசை

கிழக்கு திசையில் படிக்கும் குழந்தைகள், இளைஞர்கள் தூங்குவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். கணக்குவழக்கு பார்ப்பவர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், அவர்களின் மூளை தூக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

மேற்கு திசை

மற்றொரு சிறப்பான திசை தான் மேற்கு. இந்த திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

எனவே தூங்கும் போது, முதலில் சிறந்த திசையாக கருதப்படுவது கிழக்கு, தெற்கு, பின்பு தான் மேற்கு. வடக்கு திசையில் மட்டும் எக்காரணம் கொண்டும் தலை வைத்து படுக்காதீர்கள். இப்போது எந்த நிலையில் தூங்குவது நல்லது என்பது குறித்து காண்போம்.

மல்லாக்கப் படுப்பது

மல்லாக்க படுப்பது மிகவும் நல்லது. இப்படி தூங்குவது தலை, கழுத்து, தண்டுவடம் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் மிகவும் நல்லது. ஒருவர் இந்த நிலையில் தூங்குவதால் கழுத்து வலி, முதுகு வலி தடுக்கப்படுவதோடு, அமில சுரப்பு குறைவதோடு, உடல்வாகும் நல்லபடியாக இருக்கும். முக்கியமாக இந்த நிலையில் தூங்குபவர்களின் உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பக்கவாட்டு நிலை

பக்கவாட்டில் படுப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது பக்கமாக தூங்குவதால் இடது பக்க உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் இடது பக்கமாக தூங்கினால் முகத்தில் சுருக்கங்கள் வருவதோடு, மார்பகங்கள் தளர்ந்து வடிவம் இழந்து காணப்படும். எனவே பக்கவாட்டில் படுக்கும் போது, கால்களுக்கு இடையே தலையணை வைத்துக் கொண்டு தூங்குங்கள்

குப்புறப் படுப்பது

சிலர் குப்புறப் படுக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மோசமான நிலையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் படுத்தால், உடல் வலி தான் அதிகரிக்கும். அதோடு கழுத்து பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை குப்புறப்படுக்க விரும்பினால், இடப்பிற்கு அடியே ஒரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com