குழந்தை வளர்ப்பு என்பது யார் பொறுப்பு?

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Published on

குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு சிறிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்றாலும் பெண்கள்தான் குழந்தை வளர்ப்பில் முழு பொறுப்பு ஏற்கிறார்கள். குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால் இளம் தாய்மார்கள்தான் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்கள். தான் சரியாக கவனிக்காததால்தான் குழந்தைக்கு உடம்பு சரியில்லையோ என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார்கள்.

இளம் தாய்மார்கள் பணிச்சுமை ஒருபுறம், குற்ற உணர்ச்சி மறுபுறம் என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இரவு நேரத்திலும் பெண்கள்தான் விழித்திருந்து மருந்து கொடுக்க வேண்டும், டெம்பரேச்சர் பார்க்க வேண்டும். வேலைச் சுமை காரணமாக அசந்து தூங்கி விட்டால் கணவரும், வீட்டில் உள்ள மற்றவர்களும் கடிந்து கொள்கிறார்கள். அத்துடன் தன்னால்தான் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது, தன்னால் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ள முடியவில்லை, குழந்தையை கஷ்டப்படுத்துகிறோமோ என்ற குற்ற உணர்வில் பெண்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் குறைகளும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தன்னிடம் குழந்தை நெருக்கமாக இல்லையோ என்று வேறு குழம்புகிறார்கள். இதனால் இளம் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. அம்மா இருந்தால்தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் சில சமயம் வேலையை விட்டு விடலாமா என்று கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

இளம் தாய்மார்களுக்கு ஏற்படும் இத்தகைய குற்ற உணர்வு உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, இந்திய சமூகத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடத்திலேயே உள்ளது. குழந்தை வளர்ப்பு, வேலை என இரண்டு விஷயங்களுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு மனசோர்விற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக வேலைகளில் இருந்தும் பெண்கள் வெளியேறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பரசுராம க்ஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ உன்னி கிருஷ்ணன்!
குழந்தை வளர்ப்பு

குழந்தைகளின் உடல் நிலை, கல்வி, நடத்தை என பலவற்றுக்கும் அம்மாக்கள் மீதே பெரும்பாலான நேரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அம்மாக்களும் தங்கள் மீதுதான் குற்றம் இருப்பதாக நம்பிக் கொண்டு மனக்கவலை அடைகிறார்கள். தாய்ப்பால் ஊட்டுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களுக்காக குழந்தை வளர்ப்பின் பெரும்பாலான பொறுப்புகள் பெண்களை சார்ந்தே இருப்பதால் குழந்தைகளின் நலனின்பால் தாய்க்கு மட்டும் அதீத குற்ற உணர்வு ஏற்படுகிறது.

அதிலும் முந்தைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பில் தந்தைகள் பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாகிறது. அதனால்தான் தாய்மார்களுக்கு இத்தனை அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய சூழலில் தந்தைகளும் சிறிதளவு பொறுப்பேற்றுக்கொள்வது ஆறுதலான விஷயம்தான். குழந்தை வளர்ப்பு என்பது தாய், தந்தை இருவரின் பொறுப்பும்தான். ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு தாயை மட்டும் குறை சொல்லாமல் இருவரும் பொறுப்பேற்க வேண்டும். இருவரும் எடுத்துக்கொள்ளும் முயற்சியில்தான் குழந்தை வளர்ப்பு என்பது ஆரோக்கியமாக இருக்கும். எனவே, ஆண்களும் குழந்தை வளர்ப்பில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com