விழாக்களில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்காக?

விழாக்களில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது எதற்காக?

புதுமனை புகு விழாவோ, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவோ அல்லது இறுதிக் காரியங்கள் செய்யும் சடங்கோ எதுவாக இருந்தாலும் மாவிலைகளை பயன்படுத்துவதை அவசியமாக்கி உள்ளனர். தெய்வ பூஜைகளில் கலசங்களில் சுற்றி மாவிலைகளால் அலங்கரிப்பதை பார்த்திருப்போம். மாவிலைத் தோரணங்களை வீட்டின் முன் வாசலில் கட்டுவதும் மாவிலையினால் புனித நீரான கோமிய நீரைத் தெளிக்கவும் என கட்டாயம் நிகழ்வில் மாவிலைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் தற்காலத்தில் உண்மையான மாவிலைகள் கிடைப்பது சிரமமாக இருப்பதாலும், அதைத் தேடி அலையும் நேரமற்று இருப்பதாலும் நியதிகள் மறக்கடிக்கப்பட்டு அந்த இடத்தை தீமை தரும் பிளாஸ்டிக் மாவிலைகள் பிடித்து விட்டன. ஆனால் மாவிலைத் தோரணங்களின் சிறப்பைப் புரிந்து கொண்டால் பிளாஸ்டிக் மாவிலைகள் விலகி விடும்.

அன்று முதல் நாம் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஆழமான ஆத்மீக உண்மைகள் இருப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர். முக்கியமாக  வீடு கட்டி புதுமனை புகும் விழாவன்று புதுப்பாத்திரத்தில் பால் பொங்க வைக்கும் நிகழ்வில் கட்டாயம் மாவிலைகளை தோரணங்களாக்கி வீட்டின் நிலவு கால்களில் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் மட்டுமே அந்த மாவிலைகளைக் கவனித்து சுவாசித்து புத்துணர்வுடன் செல்வார்கள். ஆனாலும் பலரும் இதன் பயன் அறியாமலேயே சாஸ்திரங்கள் பெயரில் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் நல்லதுக்கே என்றாலும், எதற்காக மாவிலைகள் அவசியம் என்பதைப்பற்றி தெரிந்து அதைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்புதானே?

பொதுவாக வீட்டு விசேஷங்கள் என்றாலும் கோவில்களிலும் அதிக மக்கள் கூட்டமாக வந்து சேர்வதுண்டு. அப்போது அங்கு சூழ்ந்திருக்கும் நல்ல காற்றானது அதிக மக்கள் விடும் மூச்சுக் காற்றால் அசுத்தமாகி மாசுக்குள்ளாகும். இப்படி சூழும் அசுத்தக்காற்றை தூயகாற்றாக மாற்ற உதவுகிறது மாவிலை எனும் அற்புத இலைகள். ஆம் மாவிலைக்கு நோய் பரப்பும் அணுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு என்பதை அறிந்திருந்ததால்தான் அதை வழிவழியாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தி அதை நாமும் பின்பற்றக் கற்றுத் தந்துள்ளனர் நமது புத்திசாலியான முன்னோர்கள். ஆனால் தற்போது அதற்குப் பதிலாக மாவிலை வடிவில் விற்கும் பிளாஸ்டித்தோரணங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுக்கு வழிவகுக்கும்.

மாவிலைகளால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதமான் பயன்கள் உண்டு. இந்த இலைகளில் புரதம் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் A B C நிரம்பி உள்ளது. வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றுக்கு நிவாரணம் தரும். மேலும் சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றும் சக்தி இந்த மாவிலைகளுக்குஉண்டு. வீக்கங்கள் கட்டிகள் போன்றவற்றை கரைக்கும் வல்லமை உண்டு இந்த இலைகளுக்கு. 

இந்த சிறப்புகளை உணர்ந்த நம் முன்னோர்கள்  அறிவியல் முன்னேறாத அந்தக் காலத்திலேயே மாவிலையால் பல் துலக்கியதும் உண்டு. கிணற்றை சுத்தம் செய்ய இறங்கும்முன் கிணற்றில் உள்ள அசுத்த வாயுவை வெளியேற்ற  மாமரத்தின் ஒரு கிளையை ஒடித்துக் கட்டி இறக்கி சுழற்றியபின் வெளியே எடுத்தால்  சுத்த வாயு கிடைக்கும் என்று நம் முன்னோர் சொல்லக் கேட்டதாகத் தகவல் உண்டு.

இனி மாவிலைகளைப் பார்க்கும்போது சுத்தக் காற்றை நாம் சுவாசிக்க உதவும் அதற்கு நன்றி சொல்லி பயன்படுத்துவோமா? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com