பணிபுரியும் மகளிர் மாலை நேரத்தை உற்சாகமாகக் கழிப்பது எப்படி?

working women how can keep their evening time lively
working women how can keep their evening time livelyhttps://www.hindutamil.in

வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டு, அலுவலகப் பணியையும் முடித்துவிட்டு மாலை நேரத்தில் வீடு வந்து சேரும் மகளிர், சாறு பிழியப்பட்ட கரும்பு சக்கை போலதான் உடம்பிலும் மனதிலும் ஆற்றலும் உற்சாகமும் குறைந்து இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு உடல் ரீதியான சில தொந்தரவுகளும் இருக்கக் கூடும். பணியில் இருந்து திரும்பும் பெண்கள் மாலையில் சிறிது ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் தங்கள் வீட்டுப் பணிகளை உற்சாகமாகத் தொடர்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கால்களுக்கு ஓய்வு கொடுத்தல்: அன்றைய அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு வந்து சேரும்போது பெரும்பாலான பெண்களுக்கு முதுகுவலி, தலை வலி, கழுத்து வலி மற்றும் உடம்பெல்லாம் வலிக்கும். வீடு வந்து சேர்ந்ததும் நேராக சமையலறைக்குச் செல்லாமல், படுக்கையறைக்கு செல்ல வேண்டும். உடைகளை மாற்றிவிட்டு தளர்வான உடை அணிந்து கை கால்களை கழுவி விட்டு படுக்கைக்கு சென்று அல்லது சோபாவில் சற்று நேரம் படுக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு கால்களை உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் இருந்து இரத்த ஓட்டம் குறையும். இதமான உணர்வை தரும்.

பின்பு படுக்கை விளம்பில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றிக் கொள்ளவும். கைகளை உயர்த்தி உள்ளங்கைகளை திறந்து நீட்டவும். குனிந்து கைகளால் கால் விரல்களை தொட முயற்சிக்கவும். இந்தப் பயிற்சி முதுகு, தசைகள் மற்றும் முதுகெலும்புகளை நீவி விட்டது போல இதமாக இருக்கும். கழுத்தை ஐந்து முறை இட, வலமாகத் திருப்பியும், பின்பு மேலும் கீழுமாக ஆசைக்கவும். இதனால் கழுத்து வலி குறைந்து ஒரு இதமான உணர்வு உண்டாகும்.

புத்துணர்ச்சி பெற: காலையில் அணிந்து கொண்ட மேக்கப்பை கலைப்பதற்கு இயற்கையான வழி முறைகளைப் பயன்படுத்தலாம். தக்காளியை இரண்டாக நறுக்கி அதை முகத்தில் நன்றாகத் தேய்த்து வெள்ளரிக்காயை வெட்டி கண்கள் மேல் வைத்து ஒரு ஐந்து நிமிடம் நாற்காலியில் சாய்ந்து ஓய்வு எடுக்கலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு சருமம் புத்துணர்ச்சி பெறும். முகமும் பளபளப்பாகும்.

குளியல்: குளியல் அறைக்குச் சென்று விருப்பம் போல வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கலாம். குளிக்கும்போது கால்களையும் விரல்களையும் தண்ணீரில் மசாஜ் செய்யலாம். குளிக்கும் நீரில் உப்பு சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது.

தேநீர்: பின்பு சமையலறைக்குச் சென்று மூலிகை தேநீர் அருந்தலாம். கிரீன் டீ அல்லது புதினா கொத்தமல்லி, இஞ்சி டீ போன்றவற்றை குடிக்கலாம். முளைக்கட்டிய பாசிப்பயிறு, கேரட் துருவல்கள் அல்லது சிறுதானிய பிஸ்கட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

மனதிற்கு அமைதியும் ஓய்வும்: குழந்தைகளுடன் அமர்ந்து சற்று நேரம் கதை பேசலாம். வீட்டுப் பாடங்களில் உதவலாம். பின்பு சாமிக்கு விளக்கேற்றிவிட்டு சுலோகம் சொல்வது அல்லது கண்மூடி அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்திருப்பது கூட மனதிற்கு அமைதியையும் ஓய்வையும் தரும்.

இரவு சமையலின்போது பிடித்த ஆடியோ கேட்டுக்கொண்டோ அல்லது பிடித்த இசை கேட்டுக்கொண்டோ சமைக்கலாம். குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு உண்ணுவது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஆற்றலையும் கொடுக்கும். இதனால் அலுப்பு சலிப்பு தெரியாது. காய்கறி நறுக்குவது பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளுக்கு கணவரையும் குழந்தைகளையும் உதவிக்கு அழைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தூக்கமின்மையா? அலட்சியம் வேண்டாம்!
working women how can keep their evening time lively

செய்யக்கூடாதவை: வீட்டிற்கு வந்ததும் மொபைல் ஃபோனையோ அல்லது டிவியையோ கணினியோ இயக்க வேண்டாம். விரும்பத்தகாத செய்திகள் டிவியில் வரலாம். சமூக ஊடகங்களில் ஒன்றுமில்லாத பிரச்னைகளை ஊதி பெரிதாக்கி இருப்பார்கள். அதைப் பார்த்து மனதை சோர்வாக்கிக்கொள்ள வேண்டாம். கணினியில் மின்னஞ்சல்களை பார்க்க அமர்ந்தால் அது அப்படியே உங்களை இழுத்துக் கொண்டு விடும். அலுவலக வேலையை அலுவலகத்தோடு விட்டுவிட்டு வீடு என்கிற அருமையான அந்த உலகத்துக்குள் மட்டும் வாழுங்கள்.

தூங்கப்போகும் முன்பு: இரவு உணவிற்குப் பின்பு மனதை இதமாக்கும் நிகழ்ச்சிகளை சிறிது நேரம் பார்த்துவிட்டு தூங்கச் செல்லலாம். அப்போது வீட்டில் இருக்கும் நபர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனதை அழுத்தும் பிரச்னைகள் ஏதாவது இருந்தால் கணவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். யோசனை கேட்கலாம். அல்லது மனதில் இருக்கும் கசப்புகள், அன்று சந்தித்த அவமானங்கள், மன சங்கடங்கள் எல்லாவற்றையும் ஒரு டைரியில் எழுதலாம்.

ஆழ்ந்த உறக்கம் அடுத்த நாள் வேலைக்கு மிகுந்த சக்தியையும் ஆற்றலையும் அளித்து, அடுத்த நாள் காலையில் அலாரம் அடித்ததும் உற்சாகமாக எழுந்து கொள்வீர்கள். மீண்டும் ஒரு புது நாளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com