
ஜூன் 26, இன்று உலக குளிர்பதன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டு சமையலறையில் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டி முதல், தொழிற்சாலைகளில், வணிக வளாகங்களில், உணவு பதப்படுத்துதல், சேமிப்புக் கிடங்குகள், மருந்து மற்றும் சுகாதாரம், வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் குளிர் பதன தொழில்நுட்ப முறையின் பயன்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வீட்டு குளிர்சாதன பெட்டிகளின் பயன்பாடுகள்;
வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டிகளை சமையல் அறையின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். தினந்தோறும் மார்க்கெட்டுக்கு ஓடி காய்கறிகளை வாங்கி வருதல், தினம் தினம் இட்லிக்கு மாவு அரைத்தல் போன்ற வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டி. காய்கறிகள், பழங்கள், பால், தயிர், வெண்ணெய், இட்லி மாவு, தானியங்கள் என சமையலுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் பாதுகாத்து வைக்க உதவுகிறது நம் வீட்டு பிரிட்ஜ் சமைத்த உணவுகளையும் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து மீண்டும் சூடு படுத்தி உண்ணலாம். இதனால் சமைக்கும் வேலை வெகுவாக குறைந்திருக்கிறது.
தொழிற்சாலைகளில் குளிர்சாதன பெட்டிகளின் பயன்பாடுகள்;
உணவுத் தொழிற்சாலைகள்;
குளிர் பதனப் பெட்டிகள் இங்கு மிகப்பெரிய அளவில் பயன்படுகின்றன. பால் பண்ணைகளில் பால், வெண்ணெய், தயிர் போன்றவற்றை அவை பதப்படுத்தப்படுவதற்கு முன்பு கெட்டுப் போகாமல் இருக்க பண்ணைகளில் இருந்து வந்தவுடன் பெரிய ஃப்ரீசர்களில் பாதுகாக்கப்படுகிறது. இறைச்சி வகைகள் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, ராட்சத ஃப்ரீசரில் சேமித்து வைக்கப்படுகின்றன. புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெரிய சைஸ் ஃபிரிட்ஜ்களில் சேமித்து வைக்கிறார்கள்.
பழங்கள், பழக்கலவைகள், பழக்கூல், ஜூஸ் போன்றவையும் குளிர் பதனப் பெட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. வெஜிடபிள் சாலடில் கலப்பதற்காக வெட்டப்படும் காய்கறிகள், வறுக்கவும், பொரிக்கவும் பயன்படும் இறைச்சி வகைகள் போன்றவை கன்வேயர் பெல்ட்களில் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன. சில தொழிற்சாலைகளில் தயிர் அல்லது சீஸ் போன்றவற்றை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த நொதித்தல் செயல்பாட்டின்போது குறிப்பிட்ட குளிர் வெப்ப நிலையில் வைக்கிறார்கள்.
பேக்கரி மற்றும் சிற்றுண்டி தொழிற்சாலைகளில், முட்டைகள், வெண்ணை ஈஸ்ட், சில நேரங்களில் முன்பே தயாரிக்கப்பட்ட மாவை கூட சேமித்து வைக்கிறார்கள், இதனால் அதன் புத்துணர்ச்சி பராமரிக்கப்படுகிறது. பேக்கிங் செய்வதற்கு முன்பு கெட்டுப் போகாமலும் தடுக்கப்படுகிறது
பீட்சாக்கள் பெரும்பாலும் ஃப்ரீசரில் வைக்கப்பட்டு பின்பு பல்பொருள் அங்காடிகளுக்கு அனுப்பப்படும் வரை பூஜ்யத்துக்கும் குறைவான வெப்ப நிலையில் குளிப்பதனப் பெட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. குளிர்பானங்கள் ஐஸ்கிரீம்கள் போன்றவை பிரீசர்களில் சேமித்து வைக்கப்பட்டு உருகாமல் தடுக்கப்படுகின்றன.
மருந்து தொழிற்சாலைகள்; பல உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் ரெஃப்ரிஜிரேட்டர்களில் பத்திரமாக சேமிக்கப் படுகின்றன. அவற்றில் வெப்பநிலை சிறிதளவு மாறினாலும் அவற்றில் அமைக்கப்பட்டுள்ள அலாரங்கள் ஒலிக்கும். இது குளிர் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
ஆய்வுக்கூடங்கள்;
ரத்த மாதிரிகள், டிஷ்யூ கல்ச்சர், டி.என்.ஏ மற்றும் புதிய ரக மருந்துகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பமான புரதங்கள் போன்றவை மிகவும் குளிரான ஃப்ரீசரில் சேமிக்கப்படுகின்றன. மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சில பொருட்கள் குளிர்ச்சியாக வைக்கப்பட வேண்டும்.
வேதியியல் மற்றும் தொழில்துறை தொழிற்சாலைகள்;
சில ரசாயனங்கள் அதிக வினைத்திறன் கொண்டவை. அவை அறை வெப்ப நிலையில் கூட எளிதில் ஆவியாகிவிடுகின்றன. எனவே அவை பாதுகாப்பாக குளிர்ந்த தொட்டிகள் அல்லது அறைகளில் சேமிக்கப்படுகின்றன.
ஆக்சிஜன் நைட்ரஜன் அல்லது இயற்கை எரிவாயு போன்ற தொழில்துறை வாயுக்களை உற்பத்தி செய்யும் அல்லது சேமித்து வைக்கும் தொழிற்சாலைகள் இந்த வாயுக்களை திரவங்களாக மாற்ற தீவிர குளிர் பதன முறையை பயன்படுத்துகின்றன. வீட்டு உணவைப் பாதுகாப் பதற்கும், மருந்துகளைப் பாதுகாப்பதற்கும், பல்வேறு தொழில் துறைகளிலும் குளிர்பதன செயல்முறை பயன்படுகின்றது.