எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல் காலை முதல் இரவு உறங்கும் வரை பரபரவென ஒவ்வொருவரும் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் தனக்கே தனக்காகவென ஒரு மணி நேரமோ அல்லது குறைந்தது அரை மணி நேரமோ ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இந்த, ‘மீ டைமின்’ முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மன அழுத்த நிவாரணம்: தனக்காக ஒதுக்கிக்கொள்ளும் அந்த ‘மீ டைம்’ ஒருவருக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியமாகிறது. அது மன அழுத்தத்தை குறைக்கவும் ஓய்வு எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது. தினசரி அழுத்தங்கள் மற்றும் பொறுப்புகளில் இருந்து சற்று விடுதலை அளிக்கிறது.
மனத்தெளிவு: ரொட்டீன் வாழ்க்கையிலிருந்தும் செய்து கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது ஒவ்வொரு நாளும் மனதை தெளிவுபடுத்த உதவும். அந்த நேரத்தில் தெளிவாக சிந்திக்கவும் சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
சுயவிழிப்புணர்வும், இலக்கு பற்றிய சிந்தனையும்: மீ டைம் ஒருவரின் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களை பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குவதால் அதிக சுய விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். தன்னைப் பற்றிய சிந்தனையும் கொள்கையும் இலக்குகளும் ஞாபகத்துக்கு வரும். வாழ்க்கையின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை மதிப்பிடுவதற்கு மீ டைம் உதவுகிறது.
படைப்பாற்றல் மேம்பாடு: தனிமை படைப்பாற்றல் மேம்பாட்டை செழிக்க வைக்கிறது. கவனச்சிதறல்களில் இருந்து மனம் விடுபடும்போது பல ஆக்கபூர்வமான யோசனைகளும் தீர்வுகளும் வெளிவரும். வெளிப்புற தொந்தரவுகள் இல்லாமல் புதுமையான படைப்புகளை செய்வதற்கு மீ டைம் உதவுகிறது.
உறவு மேம்பாடு: தனக்கான சொந்தத் தேவைகளை ஒருவர் கவனித்துக் கொள்ளும்போது நல்ல சீரான மனநிலையில் அவர் இருப்பார். அதனால் பிறருக்கு ஆதரவளிக்கவும் அவர் சிறப்பாக தயாராக முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உறவு நல்ல மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.
ஓய்வு மற்றும் மீட்பு: மீ டைம் என்பது பெரும்பாலும் தனக்கு பிடித்த செயல்களை செய்வதும் ஓய்வெடுக்கும் நேரத்தையும் குறிக்கிறது. இந்த நேரத்தில் உடல் நன்றாக ஓய்வெடுத்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாக அமைகிறது. இந்த நேரத்தில் உடற்பயிற்சி, தியானம் அல்லது உடல் நலனை ஊக்குவிக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
கவன மேம்பாடு: மீ டைம் ஒருவருக்கு புத்துணர்ச்சியான மனதை அளிக்கிறது. அதனால் அதிக கவனத்துடனும் சிறந்த புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் ஒருவரால் தனது பணியைச் செய்ய முடிகிறது. தனது நேரத்தை ஒருவர் திறம்பட நிர்வகிக்கவும் முடியும்.
தன்னம்பிக்கை: தனியாக நேரத்தை செலவிடும்போது ஒருவருடைய தன்னம்பிக்கையின் அளவு கூடுகிறது. தனிப்பட்ட தேவை மற்றும் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையின் ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியும்.
வேலை வாழ்க்கை சமநிலை: மீ டைம் ஒருவருக்கு தன்னுடைய வேலை மற்றும் வாழ்க்கைக்கு தரவேண்டிய நேரத்தையும் சமநிலையையும் கற்றுத் தருகிறது. ஆரோக்கியமான வேலை நேரம், அதேசமயம் உறவுகள், நட்புகள், குடும்பம் போன்றவற்றுக்குத் தர வேண்டிய நேரம் போன்றவற்றை தருகிறது. வேலை, கடமைகளுக்கு மத்தியில் ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் விருப்பத்தையும் இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. அதனால் தேவைகள் மற்றும் ஆசைகளில் கவனம் செலுத்த நேரம் செலவழிக்கும்போது வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கையில் ஒருவர் திறம்பட செயல்பட மீ டைம் மிகவும் உதவியாக இருக்கிறது.