
ஆண் பெண் உறவில் விரிசல் என்பது இன்றைய சூழலில், அடித்தட்டு மக்களிலிருந்து செலிபிரிட்டி கப்பிள்ஸ் வரை கரையான் புற்றுபோல பெருகிப் பரவுவதை கண் முன் கண்டுகொண்டிருக்கிறோம். இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் மூன்று சிம்பிள் விஷயங்களை கணவன் மனைவி இருவரும் பின் பற்றினாலே போதும். நிலைமை தலை கீழாய் மாறிவிடும். பிறகு, பிரிவென்ற சொல்லுக்கே இடமிருக்காது. அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
1. நீண்ட கால உறவில் பொறுப்போடு ஈடுபடும்போது நடுவில் சில மனஸ்தாபங்கள் வருவது இயல்பு. இங்கே தவறு செய்யாத மனிதர் எவருமில்லை. உங்கள் துணை தவறு செய்யும்போது அதை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு நீங்கள் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கும் நிலை ஏற்படலாம்.
இது தொடரும்போது இருவருக்கிடையேயுள்ள அன்யோன்னியம் மற்றும் நம்பிக்கை குறையும். இதற்குப் பதில், பார்ட்னர் தவறு செய்யும்போது, சிறிது இடைவெளி கொடுத்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் அன்பான வார்த்தைகளால் அவரின் தவறை உணரச்செய்யலாம். அதன் பின் உங்க பார்ட்னர் நன்கு ரிலாக்ஸ்ஸாகி உங்க மீது அன்பைப் பொழிய ஆரம்பிப்பார்.
2. பார்ட்னரை அவ்வப்போது புகழ்ந்து பேசுவதும், அவர் செய்யும் சிறு சிறு உதவிகளுக்கும் நன்றி சொல்வதும் உங்களுக்குள்ளான காதலை வேறு லெவலுக்கு எடுத்துச்செல்ல உதவும். அவரது பர்சனாலிட்டி மற்றும் தோற்றத்தை சிலாகித்துப் பேசுவது, அவர் தேர்ந்தெடுக்கும் பொருட்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வது, அவர் தரும் காபியை ரசித்து ருசித்துக் குடிப்பது போன்ற செயல்கள் இதில் அடங்கும். நாளடைவில் இச்செயல்களே ஒரு தினசரி நிகழ்வாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பேச்சில்லாமலே அன்பை உணரச் செய்துவிடும்.
உங்கள் இருவரின் நண்பர்கள் முன்னிலையிலும் இதேபோல நடந்து கொள்ளும்போது உங்களின் சுயமரியாதை ஊக்குவிக்கப்படும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் கூடும்.
3. தழுவல், அரவணைத்தல், முத்தமிடுதல் போன்ற உடல் மொழிகளும் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். வேலைகளை முடித்த பின், மன மகிழ்வுக்காக டிவியில் ஒரு படம் பார்க்க சோபாவில் அமரும்போது, இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டும், மற்றவர் மீது சாய்ந்து கொண்டும் இருப்பது உங்களுக்கிடையேயுள்ள உணர்ச்சிபூர்வமான இணைப்பை இறுகச்செய்யும். இவ்விதமான செயல்கள் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் லவ் ஹார்மோன் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்து, அன்பையும் இணைப்பையும் கூட்ட உதவும்.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், வேலை, வீட்டுப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றிற்கே நேரமில்லாதபோது, பார்ட்னரின் எதிர்பார்ப்புகளை எட்டாத இடத்திலேயே வைத்திருக்கின்றனர் பலர்.
அதனாலென்ன? போகிற போக்கில் ஒரு அணைப்பு, ஒரு கிஸ், 'குட் பை' என்ற ஒரு சொல், போன்றவை இடைவெளியை இட்டு நிரப்ப பெரிதும் உதவுமே!