உங்களது பேச்சும் தகுதியுமே உங்கள் குழந்தைக்கு முன்மாதிரி!

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Published on

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதைத் திறம்பட, பொறுமையாக, சரியாக கையாள்பவர்களின் குழந்தைகள் வாழ்வில் ஜொலிக்கிறார்கள். குழந்தைகளும், சிறு வடிவில் இருக்கும் மனிதர்கள்தான். அவர்களுக்கு சிறு வயதில் எந்த அளவிற்கு பாசத்தை காட்டுகிறோமோ, அந்த அளவிற்கு அவர்கள் பாசமிகு மனிதர்களாக வளர்வார்கள். அதேபோல, சிறு வயதிலேயே வெறுப்பான வார்த்தைகளைப் பேசி வளர்த்தால், அவர்களும் வெறுப்பானவர்களாகத்தான் வளர்வர். ஒரு பெற்றோராக, நாம் சில விஷயங்களை குழந்தைகளிடத்தில் பேசவே கூடாது. அவற்றை குறித்துப் பார்ப்போம்.

நெகட்டிவான வார்த்தைகள்: பெற்றோர்கள் குழந்தைகளிடம் பயன்படுத்தும் நெகட்டிவான வார்த்தைகள் அவர்கள் வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால், அவர்களுக்கு அவர்கள் மீதே எதிர்மறையான எண்ணங்களை வளரலாம். எனவே, அவர்கள் எந்த வேலை செய்தாலும், அது பெரிய வேலையாக இல்லை என்றாலும் கூட, அது குறித்து அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டுமே தவிர, எதிர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.

ஒப்பிடுவது: குழந்தைகள் மட்டுமல்ல, யாரையுமே ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. குறிப்பாக, உங்கள் குழந்தையை ஒத்த வயதுடன் இருக்கும் வேறு ஒரு குழந்தைகளுடன் ஒப்பிடுவது, அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் ஒப்பிடுவது போன்ற விஷயங்களை செய்யவே கூடாது. இதனால், அவர்களுக்கு நாம் பிறரை விட தகுதி குறைந்தவரோ என்ற எண்ணம் ஏற்படலாம்.

சாபம் விடுவது: குழந்தைகள் பிறக்கும்போது, வளரும் போது எதையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. ஒரு பெற்றோராக அவர்களை நன்றாக வளர்க்க வேண்டியது பெற்றோரது பொறுப்பாகும். கடுஞ்சொற்கள் கூட அவர்கள் மனதை சுட்டுவிடும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், ‘உனக்கெல்லாம் எதிர்காலத்தில் நல்லதே நடக்காது. நீயெல்லாம் எங்க உருப்பட போற...’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். இது, அவர்கள் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் ஆழமாக பதிந்து விடும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 வகை உணவுகள்!
குழந்தை வளர்ப்பு

அழுவதை குறை சொல்வது: சிரிப்பு, புன்னகை, கோபம் போல, சோகமும் ஒரு அற்புத உணர்வுதான். சோகம், கோபம் ஏற்படும் போது அழுகை வருவதும் ரொம்ப இயல்பு.  எனவே, அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக அழும் போது அவர்களிடம் ‘இதுக்கெல்லாமா அழுவாங்க? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’ என்று கேட்காதீர்கள். குறிப்பாக, ஆண் பிள்ளைகள் அழுதால், ‘பொண்ணு மாதிரி அழாத’ என்று கூறுவதை நிறுத்துங்கள். குழந்தைகள் அழ நினைத்தால் அவர்களை சுதந்திரமாக அழ விட்டு பின்பு என்ன ஆனது என்பதைக் கேளுங்கள்.

தகுதியை குறைத்து சொல்வது: குழந்தைகளிடம் ஒரு வேலை கொடுத்தால் அதை ஒருசிலர் சரியாகச் செய்வர். ஒருசிலரால் அதை சரியாக செய்து முடிக்க முடியாது. சில குழந்தைகள் ஒரு வேலையில் சொதப்பும்போது, ‘நீயெல்லாம் எதுக்கும் லாயக்கு இல்ல. உன்ன பெத்ததுக்கு ஒரு கல்லை பெத்து இருக்கலாம்’ என்று சில பெற்றோர் அவர்களது குழந்தைகளிடத்தில் கூறுவர். இப்படி பேசும்போது அந்தக் குழந்தைக்கு, ‘ஒரு வேளை நாம் பிறக்காமல் இருந்திருந்தால் அம்மா/அப்பா சந்தோஷமா இருந்திருப்பாங்கல்ல?’ என்று நினைக்கத் தோன்றும். இதுபோன்ற ஒரு எண்ணம் உங்கள் குழந்தைக்கும் வராமல் இருக்க, இதுபோல தகுதியை குறைக்கும் வார்த்தைகளை கூறாமல் இருங்கள்.

குழந்தைகளிடம் அன்பாகவும் பொறுமையாகவும் அவர்களது ஹீரோவாகவும் நீங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டினாலே அவர்கள் அதை பின்பற்றி வாழ்வில் வெற்றி காண்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com