இம்சை அரசன் இணையம்

வாழ்வியல்
இம்சை அரசன் இணையம்

மனம் போன போக்கெல்லாம் நாம் போகலாமா?

ணையம் என்பவர் நம் முன்னால் வந்து “என்ன கேட்க வேண்டுமோ கேள்” என்று சொன்னால், “அண்ணா… நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது. பிறகு யோசித்துப் பார்க்கும்போது, அது உபயோகிப்பவர் விரல்களையும் மனதையும் பொறுத்து என்பது புரிகிறது. வக்கிரமான காணொலிகள், மனதைப் பாதிக்கும் வன்முறை, பைத்தியமாக்கும் மென்விளையாட்டுகள் இவற்றில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்ட பலர், “இது எங்கள் உரிமை, இதில் யாரும் தலையிட வேண்டாம். அறிவுரைகளை எப்போது நிறுத்துவீர்கள்?” என்ற ரீதியில் பேசுகிறார்கள். சட்டப்படி அது சரிதான். ஆனால், இதனால் யார் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது?

நாம் எதைப் பார்க்கிறோமோ, அதை நோக்கி சிந்தனை செல்கிறது. இணையத்தில் வரும் வீடியோக்களும், விளையாட்டுகளும் டோபமைன் என்ற இரசாயணத்தை நம்முள் சுரக்கச் செய்கிறது, இது சுரக்க சுரக்க, இன்னும் இன்னும் என்று இதில் நம்மை ஈடுபடத் தூண்டுகிறது. இதனால், நாம் பார்ப்பது நம்மை ஆக்கிரமிக்கிறது. ஆக, கண்டதைப் பார்ப்பதும், வக்கிரமான ஈ-விளையாட்டுகள் விளையாடுவதும் நம் உரிமையாக இருக்கலாம்; ஆனால், அதனால் பாதிக்கப்படுவது நாம் என்று உணர்ந்து வைராக்கியத்துடன் விலக வேண்டும்.

ஒரு குழுவாக நண்பர்கள் தத்தம் இடங்களிலிருந்து சேர்ந்து சில மென் விளையாட்டுகள் விளையாடும்போது, இடையில் எழுந்து போக மனமில்லாமல், விளையாட்டை நிறுத்த முடியாமல், சிறுநீர் கழிக்கக் கூட எழுந்திருக்காமல் இருக்க டயபர் அணிந்து விளையாடு கிறார்களாம். சமூக சீரழிவின் உச்சம் இதுதானோ?

தில்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் அதிகமாக நடக்கிறது. ஒரு ஆய்வின்படி, ஆண்கள் பார்ன் வீடியோக்களைப் பார்த்து, அதனால் உந்தப்பட்டு, இந்தக் கொடூரமான செயலில் ஈடுபடுவது தெரிகிறது. சமீபத்தில் தன் காதலியோடு வந்த பிரச்னையால் அவளைப் பல துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தியிருக்கிறான் ஒரு கொடூரவாதி! இதைச் செய்யத் தூண்டிய விஷயம் அவன் இணையத்தில் பார்த்த க்ரைம் தொடர் என்று அவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

இணையத்தில் வரும் எதிர்மறை விஷயங்கள், அதைப் பிரபலப்படுத்துபவர்களுக்கு ஒரு வருமானம்; சில சைக்கோக்களுக்கு அது ஒரு குரூர திருப்தி. அவர்களை நம்மால் நிறுத்த முடியாது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், நம்மைச் சுற்றி எல்லாமே தவறாக இருக்கிறது என்ற பீதியை உண்டாக்குவது அல்ல. கொஞ்சம் தொழில்நுட்பத்தை அப்புறப்படுத்தி, நிஜ மக்களோடு பழகி மகிழ்ச்சியைத் தவழ வைக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்தத்தான்.

அதே நேரத்தில், இணையம் மூலம் கற்றுக் கொள்ளக் கூடியவை பெருங்கடல். நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் நிபுணத்துவம் அடைவதற்கும், நம் திறமைகள் உலகை அடைவதற்கும் அற்புதமான மார்க்கம் இது – நம் நோக்கமும் முயற்சியும் அதில் இருக்கும் பட்சத்தில்.

அழகான விஷயங்களில் ஈடுபடும்போது வாழ்க்கை அழகாகிறது; வக்கிரமான விஷயங்களில் ஈடுபடும்போது, வக்கிரம் நம்மைச் சூழ்கிறது. இதில் எது உங்கள் CHOICE?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com