வீட்டில் செல்வம் பெருக...

வீட்டில் செல்வம் பெருக...

பாற்கடலில் வாசம் செய்பவர் மகாலட்சுமி! எங்கும் நீக்கமற பாற்கடலில் முழுவதுமாக இருப்பது உப்பாகும். எனவே இந்த உப்பில் மகாலட்சுமி என்றும் நிறைந்து இருக்கிறாள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால்தான் எல்லா விஷயத்திற்கும் கல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திற்கும் தூள் உப்பை விட, கல் உப்புதான் சிறந்தது என்று விஞ்ஞானமும் கூறுகிறது. 

வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் கல் உப்பை முதலில் பயன்படுத்த துவங்க வேண்டும். கல் உப்பை கைகளால் எடுத்து சமைக்கும் பொழுது சமையலும் ருசிக்கும், குடும்பமும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் என்கிற ஒரு சூட்சமமான குறிப்பு உண்டு. முந்தைய காலங்களில் எல்லாம் நம்முடைய பெண்கள் கல் உப்பை கைகளால் எடுத்து அளவாக போடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்று தூள் உப்பை பயன்படுத்த துவங்கியதால் பல பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.

அது போல ஒரு சிறிய அகல் விளக்கில் கல் உப்பை நிரப்பி வீட்டு வாசலுக்கு வெளியே ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்து விட்டால் போதும், வீட்டிற்குள் துஷ்ட சக்திகள் அணுகாது என்கிற ஒரு பரிகாரமும் உண்டு. சிலருடைய வீட்டிற்கு வாசலிலேயே இது போல செய்து வைத்திருப்பதை நாம் காண முடிகிறது. வெளியிலிருந்து வீட்டை பார்ப்பவர் களுடைய திருஷ்டி கழியும் என்பதாலும், துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாது என்பதாலும் இவ்வாறு அகல் விளக்கில் கல் உப்பு நிரப்பி வைக்கப்படுகிறது.

கல் உப்பை நிரப்பி வரவேற்பறையில் எங்காவது ஒரு மூலையில் வைத்தாலும் செல்வம் பெருகுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் இதை கண்ணாடி பவுலில் போட்டு வைக்க வேண்டும். அதே போல கல் உப்பு பீங்கான் ஜாடிகளில் வைப்பது ரொம்பவே விசேஷமான சக்திகளை கொடுக்கக் கூடியது. உங்களுடைய அடுப்பிற்கு வலது புறத்தில் கல் உப்பை பெரிய ஜாடிகளில் வைத்திருக்க வேண்டும். பெரிய பெரிய ஜாடிகளில் உப்பு, ஊறுகாய் போன்றவற்றை நிரப்பி வைத்திருந்தால் அங்கு செல்வம் பெருகும் என்பது ஐதீகம், குபேர வாசம் உண்டாகும். இதனால் பணம், செல்வம் கொழிக்கும்.

அது போல கல் உப்பை நீங்கள் பூஜை அறையிலும் வைக்க வேண்டும். பூஜை அறையில் பித்தளை, செம்பு அல்லது வெள்ளி கிண்ணத்திலும் நீங்கள் கல் உப்பை நிரப்பி வைக்கலாம். தினமும் வைக்க முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பொழுது கல் உப்பை வைத்து பூஜை செய்ய வேண்டும். அது போல அன்னபூரணிக்கு அரிசி படியிலிருந்து முழுவதுமாக அரிசியை நிரப்பி வைத்து பூஜை செய்தால் வறுமை நீங்கும், செல்வம் கொழிக்கும் என்பதும் நம்பிக்கை.

நாம் எதை பெருக வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுவும் பூஜை அறையில் இருக்க வேண்டும். பூஜை செய்யும் பொழுது எப்பொழுதும் சிறிதளவு பணத்தை வைத்து பூஜை செய்யுங்கள். பெரிய பெரிய பூஜைகளில் மட்டுமே இதை நாம் செய்து வருகிறோம். ஆனால் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமையிலும் நாணயங்கள், பணத்தை வைத்து பூஜை செய்து வந்தால் மேலும், மேலும் பணமானது நம்மிடம் பெருகத் துவங்கும், வீண் செலவுகள் வராது என்பது நியதி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com