மார்கழி மாத கோலங்கள் : அதன் தனிச்சிறப்புகள்!

லைஃப்ஸ்டைல்
மார்கழி மாத கோலங்கள் : அதன் தனிச்சிறப்புகள்!

மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது முன்பனி, கோலம், பஜனை, கோவில் பிரசாதம். தினமும் போடும் கோலத்தை விட மார்கழியில் போடும் கோலத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

மார்கழி மாதம் , ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது உடலுக்கு மிகவும் நல்லது எனக் கருதப்படுகிறது. ஆகவே தான் அதிகாலையில் குளித்து கோவிலுக்கு செல்லும் வழக்கமும் மார்கழியில் வந்தது.

கோலங்களில் தான் எத்தனை வகைகள்..புள்ளிக்கோலம், கோட்டுக்கோலம், சித்திரக்கோலம், சிக்குக்கோலம், வண்ணக்கோலம் என பலவிதம் உண்டு. புள்ளிக்கோலத்திலும் நேர்புள்ளி, இடைப்புள்ளி என்று இருவகைகள். 

புள்ளிகளை மனக்கணக்கு போல நினைவில் வைத்துக்கொண்டு, அழகாகவும், நேர்த்தியாகவும் போடும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அத்துடன் நாம் புள்ளிகளை இணைக்க கோடு போடும் போது, நம் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதால் மனதிற்கும், மூளைக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது.

அத்தோடு, நாம் வாசலில் அரிசிமாவில் கோலம் போடுவதால் எறும்பு, பறவைகளுக்கு உணவும் கிடைக்கிறது. பறவைகளும், அணிலும் சாப்பிடும் அழகே தனி.

வாசலில் நீர் தெளித்து, ஈர மண்ணில் கோலம் போட்டு, அதன் நடுவே சாணி பிடித்து வைத்து, அதில் பரங்கிப்பூ வைத்தாலே வீட்டிற்கு தெய்வீகக்களை வந்துவிடுகிறது.

பூஜை அறையில் போடுவதற்கு என ஸ்ரீ கோலம், ஐஸ்வர்யா கோலம், நவக்கிரக கோலம் உண்டு. பண்டிகை நாட்களில் அரிசிமாவில் கோலம் போடுவது சிறப்பு.

பொங்கலுக்கு , இன்றும் பொங்கல் பானை, கரும்பு என வரைந்து, அதற்கு வண்ணம் கொடுத்து, பொங்கலோ பொங்கல் என எழுதி அனைவரையும் வாழ்த்தும் பழக்கம் உள்ளது.

கிராமத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் , பெண்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக கோலப்போட்டி வைத்து  பரிசு தருகின்றனர்.

ஒரு கோலம் போடும்போது, நம் ரசனையும், கற்பனையும் விரிவடையும். உடலுக்கும், மனதிற்கும் பலம் தரும் விதமாக நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த கலையை மார்கழி முழுதும் போட்டு மகிழ்வோம் தோழிகளே...!

குறிப்பு : தனது பாட்டி கற்றுக்கொடுத்ததை புரிந்துகொண்டு, அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்த அவரது பேத்தி ஆர்வமுடன் போடும் கோலம்தான் மேலே உள்ள புகைப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com