வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தும் 12 விஷயங்கள்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

1- சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள். வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.

2- உங்களின் சிறந்த செயலை எல்லோருமே பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். பலரும், தங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்தால்தான் பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட பாராட்டுகளுக்கு மயங்காதீர்கள்.

3- உங்களை நிறைய பேர் வெறுத்தால், நீங்கள் தவறானவர் என்று அர்த்தமில்லை. உங்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, தாங்கள் நினைத்ததைச் செய்யவைக்க முடியாதபோது சிலர் உங்களை வெறுக்கலாம். அது உங்களின் தவறல்ல!

4- உணர்வுகள் தற்காலிகமானவை, கோபமோ, எரிச்சலோ, அந்த உணர்வின் தாக்கத்தில் நீங்கள் ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அந்த முடிவுகளின் விளைவுகள் நிரந்தரமானவை. எனவே, முடிவுகளைக் கவனமாக எடுங்கள்.

5- ஒய்வெடுக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் ஏதோ ஒரு வேலையில் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஏதேதோ விஷயங்கள் குறித்து யோசித்துக் குழம்ப மாட்டீர்கள். கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்த மாட்டீர்கள்.

6- உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் எப்படி எதிர்வினை நிகழ்த்துகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்குத் தொடர்பில்லாத எதை எதையோ நினைத்து நிம்மதியைத் தொலைக்காதீர்கள்.

7- நீங்கள் சொல்லும் அறிவுரைகளை யாரும் பின் பற்றுவதில்லை. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குழந்தை களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்ல முன்மாதிரியாக இருங்கள்.

8- ஏதோ ஒரு சூழலில் யாரோ ஒருவருடன் விவாதம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். அவர் சொல்லும் கருத்தில் உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், அவர் உங்களின் அன்புக்குரியவர் என்றால், விவாதத்தை தவிர்த்துவிடுங்கள். கருத்துகளைவிட உறவுகள் முக்கியம்.

9- உங்களைப் பற்றி உங்களைவிட நன்றாகஅறிந்தவர் வேறு யாருமில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அடுத்தவர்கள் தீர்மானிக்கக்கூடாது. அதை நீங்கள் முடிவுசெய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
தென்கொரிய பெண்கள் பயன்படுத்தும் 5 அழகுசாதனக் கருவிகள் (beauty tools) என்னென்ன தெரியுமா?
motivation image

10- நீங்கள் செய்யும் நூறு நல்ல விஷயங்களை இந்த உலகம் எளிதில் மறந்துவிடும். ஆனால், ஒற்றைத் தவறை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும். எனவே, செயல்களில் கவனமாக இருங்கள்.

11- நாம் எப்படிப்பட்டவர் என்பதை நாம் வாழு சூழல் முடிவு செய்வதில்லை. நாம் எடுக்கும் முடிவுகளே அதைத் தீர்மானிக்கின்றன. சிறந்த முடிவுகளையே எப்போதும் எடுங்கள்.

12- சில நேரங்களில் எதிர்பாராத பிரச்னைகள், நெருக்கடிகள், துன்பங்கள் நேரலாம். அதற்காக நொந்துகொள்ளவோ, நம்மைச் சபித்துக்கொள்ளவோ தேவையில்லை. எப்போது, எதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் இவை நிகழாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com