

மனிதன் தன் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சாதாரண பயணியாக இல்லாமல் அந்த பயணத்தை வழிநடத்தும் முன்னோடியாக இருக்க வேண்டும். அதற்கு அவனுடைய வாழ்க்கையில் மாற்றம் நிகழ வேண்டும். மனிதர்கள் மனது வைத்தால் 30 நாட்களில் தன்னுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றி வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. டிஜிட்டல் சாதனங்களை மிகக்குறைவாக பயன்படுத்துதல்!
நமது பெரும்பான்மையான நேரத்தை தற்போது சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. செல்போனில் அதிகமாக நேரத்தை செலவழிக்கிறோம். இதனால் செய்ய வேண்டிய வேலைகள் அத்தனையும் தடைபட்டு போகின்றன. செல்போன் பயன்பாட்டை நன்றாக குறைப்பது அவசியம். தூங்கி எழுந்த முதல் இரண்டு மணி நேரம் வரை மொபைல் போனை பார்க்கக் கூடாது. பிறர் பதிவிடும் செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு பதில் சொல்வதற்கு ஏன் மூளையை தயார் படுத்த வேண்டும்? அதற்குப் பதிலாக அன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அமைதியாக உட்கார்ந்து சிந்தித்து பட்டியலிடலாம்.
2. யாரையும் சாராமல் தனித்திருத்தல்!
தனிமை என்பது தண்டனை அல்ல, அது ஒரு வரம். நமது சந்தோஷத்திற்கு எப்போதும் பிறரை சார்ந்திருக்கிறோம். பிறரின் உணர்ச்சி பூர்வமான ஆதரவை சார்ந்திருப்பதை விட்டுவிட்டு தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் போது தான் ஆழ்மனம் என்ன சொல்கிறது என்று கேட்டு அதற்கு ஏற்றவாறு முடிவுகளை தீர்மானங்களை சிறப்பாக எடுக்க முடியும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் அச்சங்கள் இவற்றை பிறரிடம் விவாதிக்கும் முன்பு அவற்றை ஒரு பேப்பரில் எழுதலாம். இதனால் பயம் குறையும். பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும். இலக்குகளை காகிதத்தில் எழுதும் போது மன அழுத்தம் குறைந்து அதற்கான தெளிவும் பிறக்கும். திட்டம் தீட்டுவதற்கான வழியும் கிடைக்கும்.
3. ஒழுங்குபடுத்துதல்!
ஒருவரின் வெற்றி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையின் மூலமே கிடைக்கிறது. பொருள்கள் சிதறிக்கிடக்கும் அறையில் அமர்ந்து அமைதியாக வேலை செய்ய முடியாது. அதுபோல குழப்பமான மனநிலையில் தெளிவாக சிந்திக்க முடியாது. எனவே ஒழுங்கமைக்கப்பட்ட எண்ணங்களை மனதில் நிறுத்தி வெற்றிக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும். திட்டங்களை பற்றி பிறருக்கு சொல்வதை நிறுத்திவிட்டு அமைதியாக செயல்படுத்த தொடங்க வேண்டும். இது வெற்றிக்கு வழிவகுக்கும் சிறந்த முறையாகும்.
4. நேரம் ஒதுக்குதல்!
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை மிக முக்கியமான வேலைக்காக மட்டும் ஒதுக்க வேண்டும். பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வது பாட்காஸ்ட் கேட்பது போன்றவற்றை செய்யாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஒருவருடைய உற்பத்தி திறன் ஐந்து மடங்காக அதிகரிக்கும். எந்தவித சத்தமும் இல்லாமல் வேலை செய்யும்போது ஆக்கபூர்வமான சிந்தனைகளும் பிறக்கும்.
5. தியாகங்கள்!
வாழ்க்கையில் சிறந்தவற்றை அடைய வேண்டும் என்றால் இதுவரை செய்யாத தியாகங்களை செய்ய வேண்டும். சொகுசான வாழ்க்கை, அதிகமாக ஓய்வு எடுப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே சுற்றுவது போன்றவற்றை தியாகம் செய்தல் அல்லது பெருமளவு குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் வாழ்வில் வெற்றியை விரைவாக அடைய முடியும்
இந்த ஐந்து செயல்முறைகளும் ஒருவர் தன்னை வருத்திக் கொள்வதற்காக சொல்லப்பட்டது அல்ல, மாறாக தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு வெற்றியை மகிழ்ச்சியையும் அடைவதற்கான வழிமுறைகள். இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால், ஒரு மாத முடிவில் பார்க்கும் போது புதிய மனிதனாக மாறியிருப்பது நிச்சயம்.