மன உறுதியை அதிகரித்து வெற்றி பெற 4 எளிய வழிகள்!

motivation image
motivation imageImage credit - pixabay.com
Published on

வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான தேவையாக இருப்பது மனஉறுதி. தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஏதாவது பின்னடைவுகள் ஏற்பட்டால் மனஉறுதி இல்லாதவர்கள் அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள். ஆனால் மனஉறுதி உள்ள நபர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். மனஉறுதியை அதிகரித்துக் கொள்ளும் நான்கு எளிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. வீண் உரையாடலை தவிர்க்கவும்

வெற்று அரட்டை மற்றும் வாழ்க்கைக்கு தேவையே இல்லாத உரையாடல்களில் நேரத்தை வீணடிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். வீண் அரட்டை பெரும்பாலும் தேவையில்லாத வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை கொண்டு வந்து சேர்க்கிறது. பிறரை பற்றிய செய்திகள் எந்த விதத்திலும் ஒருவருக்கு நன்மை சேர்த்து விட முடியாது. பிறரின்  தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை. தேவையற்ற தகவல்களை மனதில் சேமித்தால் மனதின் ஆற்றல் குறைந்து போகும். பிறரை பற்றிய வதந்திகளை கேட்கும்போது அது நமது மனத்தையும் பாதிக்கும். நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிவாகிவிடும். தேவையற்ற தகவல்கள் நமது மூளையில் பதிவாகி எண்ணங்களைச் சீர்குலைத்து கவனத்தையும் அமைதியையும் பாதிக்கிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் தீர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. இது மனவலிமியையும் மன உறுதியையும் அதிகரிக்கும்

2. உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்

எது நல்லது என்று தோன்றுகிறதோ அதை முடிவு செய்து விட்டால் அதில் மிக உறுதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலுக்கு நல்ல சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியம் இல்லாத கொழுப்பு நிறைந்த வருத்த உணவுகளை தவிர்ப்பது என்று முடிவு எடுத்துவிட்டால் அதில் மிக உறுதியாக இருக்க வேண்டும். பிறர் தொடர்ந்து வற்புறுத்தி வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் 'இல்லை, நான் முடிவெடுத்துவிட்டேன். என்னுடைய ஆரோக்கியம் எனக்கு முக்கியம். நான் நாக்குக்கு அடிமையாக மாட்டேன்' என்று உறுதியாக அவர்களிடம் சொல்ல வேண்டும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க கூடாது. இதனால் ஒருவரின் மன உறுதி பலப்படுகிறது. தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதன் மூலம் சுயமரியாதையை அதிகரித்து கொள்கிறார்கள்.

3. அமைதிக்கான நேரம்

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அமைதிக்கான நேரமாக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் தனிமையாக இருப்பது மிகவும் அவசியம். யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர வேண்டும். செல்பேசி அருகில் இருக்கக் கூடாது. தன்னுடைய எண்ணங்களில் கவனம் செலுத்தி உள் மனதை ஆராய வேண்டும். இதனால் ஒட்டுமொத்த மன உறுதியும் அதிகரிக்கிறது. தன்னை நோக்கி உள்ளார்ந்த சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது எண்ணங்களுக்கு வலுவூட்டி ஆற்றலை அளிக்கிறது. சிறந்த மன உறுதியையும் அளிக்கிறது. மனதில் தெளிவும் அமைதியும் நிலவுகிறது. 

4.  எதிர்மறைகளை விலக்கவும்;

தொடர்ந்து எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்தும், எதிர்மறை சிந்தனை மற்றும் எதிர்மறையான செயல்களில் ஈடுபடுபவரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அவர்களிடம் தொடர்ந்து பழகினால் மிக எளிதாக தன்னுடைய எதிர்மறை எண்ணங்களையும் செயல்களையும் பிறர் மேல் திணிக்கக்கூடும். இதனால் சம்பந்தப்பட்ட நபரின் மன உறுதி பாதிக்கும். எனவே இந்த மாதிரி நபர்களை தவிர்த்து விட்டு நேர்மறையான மனிதர்களிடம் பழக வேண்டும். நேர்மறையான எண்ணம் கொண்டவர்களோடு அதிக நேரம் இருப்பதை வழக்க மாக்கிக் கொள்ள வேண்டும். 

ஒருவர் இந்த எளிய நான்கு வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் மன உறுதி அதிகரிப்பதோடு தனது முயற்சியில் வெற்றியும் பெறுவார் என்பது திண்ணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com