
பேச்சுவார்த்தை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர் இணைந்து ஒரு இணக்கமான தீர்வை எட்டுவதற்கான உரையாடலாகும். பேச்சு வார்த்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன, என்ன திறன்கள் தேவை என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் தீர்வைப் பெற உதவும்.
பேச்சுவார்த்தையின் பொழுது நம்பிக்கையை வளர்ப்பது, அதனை ஒரு போட்டியாகக் கருதாமல் செயல்படுவது, மற்றவர்களைப் புரிந்து கொள்வது போன்ற முக்கிய பழக்கங்கள் உள்ளன.
1) நம்பிக்கையை வளர்ப்பது:
நம்பிக்கை என்பது பேச்சுவார்த்தையின் மிக முக்கியமான அம்சமாகும். நம்பிக்கையை வளர்க்கும் உத்திகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். இது ஒரு சிறந்த சூழலை உருவாக்கி, இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்த உதவும். நம்பிக்கையை வளர்க்க, மற்ற தரப்பினரின் கருத்தை கவனமாகக் கேட்டு, பகிரப்பட்ட இலக்குகளைக் கண்டறிந்து, வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொள்ளலாம்.
உணர்ச்சிவசப்படாமல் பிரச்சனையில் கவனம் செலுத்தி, மோதலைத் தவிர்த்து அமைதியான முறையில் தீர்வுகளைக் கண்டறிய முற்பட்டால் நீண்ட கால உறவுகளை வளர்க்கவும், நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும்.
2) தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு:
திறம்பட தொடர்பு கொள்வது மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுவது பேச்சுவார்த்தையில் வெற்றி பெற உதவும். பேச்சுவார்த்தைக்கு முன் நம் இலக்குகள், தேவைகள் மற்றும் சாத்தியமான சலுகைகள் குறித்து முழுமையாக தயாராவது அவசியம். மற்ற தரப்பினர் என்ன கேட்கக் கூடும் என்பதைப் பற்றிய தகவல்களையும், அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க போகிறோம் என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுவது திறம்பட தொடர்பு கொள்ள உதவும்.
3) விலகிச் செல்லும் மனநிலை:
பேச்சு வார்த்தையின் மிகவும் சவாலான பகுதிகளில் ஒன்று எப்போது விலகிச் செல்ல வேண்டும் என்பதை அறிவது. சமரசங்கள் அல்லது விதிமுறைகள் எட்டப்பட முடியாது என்பதை உணர்ந்தவுடன்், பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம் என்பதை உணர்ந்து விலகிச் செல்வது.
வெளியேறும் மனநிலை என்பது வாதங்கள், பாராட்டப்படாத உறவுகள் அல்லது பொருந்தாத திட்டங்கள் போன்ற நம் நல்வாழ்வுக்கு நன்மை பயக்காத அல்லது ஒத்துப் போகாத சூழ்நிலைகளில் இருந்து எப்போது விலகுவது என்பதைப் புரிந்து கொண்டு விலகும் மனநிலை. இது தோல்வியின் அடையாளமாக இல்லாமல் சுயமரியாதைச் செயலாகவும், சிறந்த வாய்ப்புகளுக்கான இடத்தை உருவாக்கும் உத்தியாகவும், தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாகவும் இருக்க முடியும்.
4) மற்றவர்களைப் புரிந்து கொள்வது:
நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது மற்றும் அதே நேரத்தில் மற்றவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம். மற்றவர்களுடைய நோக்கங்களையும் தேவைகளையும் புரிந்து கொள்வது, பேச்சுவார்த்தையில் சரியான அணுகுமுறையை எடுக்க உதவும்.
நம் நோக்கத்தை மட்டும் பார்க்காமல், எதிர்தரப்பு என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதாவது அவர்களின் கோணத்திலிருந்து விஷயங்களைப் பார்ப்பது பொதுவான புரிதலுக்கு வர உதவும்.
5) இரு தரப்பினருக்கும் நன்மை தரும் தீர்வுகளை முயற்சி செய்வது:
பேச்சுவார்த்தையை ஒரு போட்டியாகக் கருதாமல், ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர் தோற்க வேண்டும் என்று நினைக்காமல் இரு தரப்பினருக்கும் பலன் தரக்கூடிய, நன்மை பயக்கும் வகையில் தீர்வு காண முயற்சி செய்வது.
இந்த அணுகுமுறை நீடித்த நல்லுறவுகளை உருவாக்க உதவும். அதாவது விரோதமான இயக்கவியலை உருவாக்குவதற்கு பதிலாக பகிரப்பட்ட சிக்கலை தீர்க்க மற்ற தரப்பினுடன் இணைந்து பணியாற்றுவது போட்டியாக இல்லாமல் ஒத்துழைப்பாக அமையும்.