ஒருவருடைய வெற்றியில், வாழ்வில் ஆளுமைத்தன்மை முக்கிய இடம் பிடிக்கிறது. நேர்மறை எண்ணங்களால் நிரம்பி இருக்கும் ஒருவர் இந்த உலகத்தை வசீகரிக்க முடியும். ஆளுமைத் தன்மையை எந்த வயதிலும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அவருக்கு தேவை சுய விழிப்புணர்வு ஆர்வம் மற்றும் முயற்சி. இதனால் அவர் தனது உறவுகளை பலப்படுத்திக் கொள்ளவும் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ளவும் பிறரிடமிருந்து மேம்பட்டவராக திகழவும் முடியும்.
1. தன்னை நன்றாக புரிந்து கொள்ளுதல்;
தன் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒருவர் முதலில் தன்னை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன் உறவுகள், உணர்வுகள் இவற்றை பலதரப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி கையாளுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நெருங்கிய வட்டத்தில் உள்ள உறவுகளும் நட்புகளும் ஒருவரை பற்றி என்ன கருத்து சொல்கிறார்களோ அதை கவனமாக கேட்க வேண்டும் ஏதும் குறைகள் இருப்பின் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. தன் பலம் மற்றும் பலவீனங்களை சுய பரிசோதனை செய்து கொள்தல்;
ஒரு மூன்றாம் மனிதரைப்போல ஒருவர் தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தன்னுடைய நிறைகள் குறைகள் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும். அதில் இருக்கும் பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்ற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரால் வாழ்வில் முன்னேற முடியும்.
தன்னுடைய ஆளுமை தன்மையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக ஒருவர் எதிலும் விரைந்து முடிவெடுக்கும் திறன் உள்ளவர் என்றால் அது அவருடைய பணியிடத்தில் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதுவே குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தலாம். ஏனென்றால் பிறரின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது அவருடைய பொறுமையின்மையையும் பிறரை அடக்கி ஆளும் தன்மையையுமே காட்டுகிறது. எனவே முடிவெடுக்கும் முன்பு பிறரை கலந்த ஆலோசிக்க வேண்டும் என்று அவர் தெரிந்து கொள்ளலாம்.
3. தன் தனிப்பட்ட இலக்குகளை தீர்மானித்தல்:
வாழ்வில் வெற்றி பெற இலக்குகளை தீர்மானிப்பது போலவே தன் ஆளுமை தன்மையை உயர்த்திக்கொள்ள தனிப்பட்ட இலக்குகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருக்கிறார் என்றால் அதை மாற்ற வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பணியிடத்தில் கூச்ச சுபாவியாக இருந்தால் வெற்றி பெற முடியாது. அதை மாற்றிக் கொள்வேன் என்று அவர் தீர்மானித்துக் கொண்டு பிறருடன் நன்றாக பேசிப் பழக வேண்டும்.
4. புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல்;
எப்போதும் ஒரே போல இருப்பது முன்னேற்றத்தை கொண்டு வராது. புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அது தொழில்நுட்பம் ஆகட்டும் அல்லது குக்கரி வகுப்பாகட்டும். ஆர்வம் தான் இதில் முக்கியம். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது ஒரு சக்தி வாய்ந்த ஆளுமைத் தன்மையுள்ள நபராக திகழ முடியும்.
5. பிறரை சரியாகப் புரிந்து கொள்ளுதல்;
குடும்பம், உறவுகள், நட்பு வட்டம் மற்றும் பணியிடத்தில், சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனை என்றாலும் அவர்கள் இடத்திலிருந்து அதைப் புரிந்து கொண்டு நடந்தால் நல்ல விதமாக மனிதர்களை கையாள முடியும். எப்போதும் பிறர் மேல் எம்பதி (Empathy) என்கிற அனுதாபம் இருக்க வேண்டும். இதனால் ஒருவருடைய ஆளுமை தன்மை உயர்வதோடு மற்றவர் களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.