மனச்சோர்வு என்ற ஒன்று எல்லா மனிதர்களுக்கும் இருப்பது உண்மைதான். ஆனால் இதைப் பற்றி பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது என நினைக்கிறார்கள். ஆனால் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 250 மில்லியன் மக்கள் உலக அளவில் மனச்சோர்வில் இருப்பதாக தரவுகள் சொல்கிறது.
இந்த பாதிப்பு அனைவருக்குமே பொதுவானதுதான் என்றாலும், சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றுவது மூலமாக இதன் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த பதிவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் 5 பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நல்ல தூக்கம்: சராசரியாக ஒரு நபர் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சிலர் 7 மணி நேரம் தூங்கினால் போதும் என்பார்கள் சிலரோ 6 மணி நேரம் என்பார்கள். ஆனால் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவது மிகவும் மோசமானதாகும். சில ஆய்வுகளின் படி முறையான தூக்கம் இல்லாதவர்களின் உடல் மோசமாக செயல்படும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினசரி நன்றாக தூங்கினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
நல்ல உணவு: இப்போதெல்லாம் நாம் சாப்பிடும் உணவுகள் ருசியாக இருக்கிறதே தவிர ஆரோக்கியமாக இருப்பதில்லை. எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்கிறோம். ஆனால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் படியான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது மனச்சோர்வின் வீரியம் குறைகிறது.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்றதும் நீங்கள் கஷ்டப்பட்டு ஜிம்முக்கு சென்று கடினமாகதான் செய்ய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக ஒரு மணி நேரம் உடலை அசைக்கும் படியாக ஏதாவது உடற்பயிற்சி செய்தாலே போதுமானதுதான். உடற்பயிற்சி செய்யும்போது மனச்சோர்வை குறைக்கும் ரசாயனங்கள் சுரக்கிறது.
மக்களோடு பழகுங்கள்: எப்போது நமது கையில் போன் வந்ததோ அப்போதே மக்களோடு பழகுவது வெகுவாக குறைந்துவிட்டது. தனியாக இருப்பதினாலேயே நாம் பல விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு மனச்சோர்வை ஏற்படுத்திக் கொள்கிறோம். எனவே நீங்கள் மனச்சோர்வில் இருந்து விடுபட வேண்டும் என்றால், மக்களோடு கலந்து செயல்படுவதை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மது/புகை வேண்டாம்: மது, புகை போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துவது மனச்சோர்வின் தன்மையை அதிகரிக்கும். இத்தகைய பழக்கங்களால் மூளை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் மது, புகை போன்ற பழக்கங்களை விட்டு விடுங்கள்.